முன்னாள் அமைச்சர்களுக்கு மைத்திரி அதிரடி உத்தரவு!

image_pdfimage_print

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்காகவும் ஆபேட்சகர்களின் தேர்தல் செயற்பாடுகளுக்காகவும் அரச உடைமைகளை துஷ்பிரயோகம் செய்வதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுதல், அரச வாகனங்களை உபயோகப்படுத்துவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுதல், கடந்த அரசாங்கத்திலும் தற்போதைய காபந்து அரசாங்கத்தில் செயலாற்றும் தற்போதைய நிலைமையிலும் அந்தந்த அமைச்சுகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்காக வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தற்போதைய அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் கீழ் காபந்து அரசாங்கம் என்ற வகையில் வேட்புமனு தாக்கல் பற்றிய அறிவித்தலிலிருந்து பாராளுமன்றம் கூடும் வரையிலான காலப்பகுதியில் அமைச்சரவை, பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட காபந்து சபைக்கே அதிகாரம் இருக்கின்றது.

ஆகையால் அந்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை தவிர்ந்த வேறு எவருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய எவருக்கும் அரச வாகனங்கள் மற்றும் அரச பொது உடைமைகளை தேர்தல் பிரசார பணிகளுக்காக உபயோகப்படுத்துவது சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆகையால் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்ற இத்தருணத்தில் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அவர்கள் வசமிருக்கும் அரச வாகனங்கள், வளங்கள், ஆகிய அனைத்தையும் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்களிடம் கையளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் அவற்றைக் கையளிப்பதில் தாமதம் ஏற்படுமாயின் பொலிஸார் மூலம் சட்ட ரீதியாக அவ்வாகனங்களை மீளப் பெறுவதற்கும் அவ்வாறு சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் எவராக எந்தக் கட்சியை சார்ந்தவர்களாக இருப்பினும் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஆகையால் அரச வாகனங்களை உபயோகப்படுத்துதல், அரச பொது உடைமைகளை உபயோகப்படுத்துதல் ஆகியன இத்தருணத்தில் முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவ்வாறான உபயோகம் சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதையும் உங்களுக்கு நான் மிகுந்த தயவுடன் ஞாபகப்படுத்துகின்றேன். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.