விரைவில் நல்லாட்சியை நிலைநாட்டுவோம்! ஜக்கிய தேசிய கட்சியின் அதிரடி திட்டம்!

image_pdfimage_print

சிறிலங்கா ஜனாதியின் அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்து மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி சூளுரைத்துள்ளது.

இதற்காக ஜனநாயகத்தை ஆதரிக்கும் அனைத்துத் தரப்பினருடனும் கைக்கோர்க்கவும் ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க, விரைவில் நல்லாட்சியை நிலைநாட்டுவோம் என்றும் அறிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து நேற்றைய (11.11.2018) தினம் கொழும்பில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் இணைந்துகொண்ட நிலையிலேயே ரவி கருணாநாயக்க இந்தத் தகவல்களை தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பில் நவம்பர் 11 ஆம் திகதியான நேற்றைய தினம் இந்த போராட்டத்தில் இணைந்துகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ரவி கருணாநாயக்க, சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அரசியல் சாசனத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமான நடவடிக்கைகளில் இருந்து நாட்டை காப்பாற்றி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாக சூளுரைத்தார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் இந்தப் போராட்டத்தில் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்துத் தரப்பினரும் தம்முடன் கைகோர்திருப்பதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

‘இருட்டிற்கு எதிராக விளக்கேத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற அமைதியான இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான, மங்கள சமரவீர, ராஜித்த சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, டி.எம்.சுவாமிநாதன், ஜோன் அமரதுங்க, ருவான் விஜேயவர்தன, லகி ஜயவர்தன, நளீன் பண்டார, முஜுபர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, ஹிருனிகாண பிறேமச்சந்திர, ஹர்ஷ டி சில்வா, அனோமா மகோ ஆகியோருடன், கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனாநாயக்க ஆகியோரும் இணைந்துகொண்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் இணைந்துகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,.

“எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்திற்கு முன்னால் நாடாளுமன்றில் 105 பேரினது ஆதரவைக்கூட திரட்டிக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்திருக்கின்றார். எவருக்கும் எந்தவொரு அறிவிப்பையும் விடுக்காது, அரசியல் சாசனத்திற்கு விரோதமாக சென்று ஜனாதிபதி இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றார்.

நாம் எந்தவொரு தேர்தலுக்கும் முகம்கொடுக்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அதற்கு நடைமுறையொன்று இருக்கின்றது. அரசியல் சாசனத்திற்கு அமைய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

ஆனால் நாம் பதவிக்கு கொண்டுவந்த ஜனாதிபதி இன்று எம்மை நிராகரித்தவிட்டு அவரை படுகொலை செய்வதாக அவரே குற்றம்சாட்டிய நபர்களுடன் கூட்டுச் சேர்ந்து இன்று அரசியல் சாசனத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான இந்த நாடகங்களை அரங்கேற்றியிருக்கின்றார். அதனால் இன்று ஜனாதிபதியின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்று தடை உத்தரவுகளை கோரத் திட்டமிட்டிருக்கின்றோம்.

நாம் அன்று நாட்டில் இருந்த சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து நல்லாட்சியை உருவாக்கினோம். அதேபோல் அந்த நல்லாட்சியை நாம் அனைவரும் இணைந்து மீண்டும் நிலைநாட்டுவோம். அதற்குத்தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்” என்று ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.