இலங்கை அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கு அமைவாகவே நாடாளுமன்றத்தை அவர் கலைத்திருப்பதாக, சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரிய இன்று உயர் நீதிமன்றில் முன்னிலையாகி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை தற்சமயம் இடம்பெறுகிறது. இதன்போது தமது பதிலிறுப்பை முன்வைத்த சட்டமா அதிபர், அரசியல் யாப்பின் 33ம் சரத்தின் 2ம் உபரத்தின் அடிப்படையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் பிழையற்றது என்று குறிப்பிட்டார்.
அத்துடன் அந்த சரத்துக்கு அரசியல் யாப்பின் வேறெந்த சரத்தின் மூலமாகவும் வரையறை விதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பில் இருக்கின்ற அதிகாரங்களின் அடிப்படையிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது என்றும் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் ரத்து செய்யுமாறும் அவர் உயர் நீதிமன்றைக் கோரியுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றில் தற்போது இடம்பெற்று வருகிறது.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில், பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜெயவர்தன ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய மூவர் ஆயம் தற்போது இந்த மனுக்களை பரிசீலனை செய்து வருகின்றன. குறித்த மனுக்கள் மீதான விசாரணை இடம்பெறுகின்ற நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.