மலையக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

image_pdfimage_print

இலங்கை பாராளுமன்றம் இன்று (15) காலை கூடப்பட்டது. நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய சிறப்புரையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கை நியாயமானது என தெரிவித்ததாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். நோர்வூட் மைதானத்தில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பிரதமர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர். இவர் தோட்ட தொழிலாளர்கள் முன்வைத்துள்ள ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் எனவும், அவர்களின் கோரிக்கைகள் நியாயமானது எனவும் தெரிவிக்கும் போதே நம்மவர்கள் கூச்சலிட்டு கைதட்டி கும்மாலம் போடுவதற்காகவா நீங்கள் வாக்களித்தீர்கள் என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க எனக்கு அவசியமில்லை. அதேநேரத்தில் தோட்ட தொழிலாளர்களின் நிலைமை தொடர்பில் பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தியுள்ளேன்.இந்த நிலையில் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அடுத்த வாரம் இது கிடைக்கும் என நினைக்கின்றேன்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை நான் பொறுப்பேற்றவுடன் தோட்டப் பகுதிகளில் கட்டப்படுகின்ற மனிதவள அபிவிருத்தி நிதியத்துடன் அமைக்கப்படும் வீடுகளுக்கு தலைவராக எஸ்.அருள்சாமியை நியமித்துள்ளேன்.ஆனால் அவர் அங்கு சென்று ஆராய்ந்த பொழுது இதுவரை கட்டப்பட்ட வீடுகளுக்கு தரகர் பணமாக அதிகம் செலவு செய்துள்ளதால் தரமற்ற வீடுகளே கட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எதிர்காலத்தில் நாம் தோட்டப் பகுதிகளில் கட்டும் வீடுகளுக்கு கூரை போடுவது அல்ல. மாறாக கட்டப்படும் தனி வீடுகளுக்கு மேல் மாடி அமைக்கும் வகையில் கொங்கீறிட் இட்டு கட்டப்படும்.

கட்டப்படும் வீடுகளுக்கு அப்பால் மேல் மாடிகளை அமைத்துக் கொள்வது தொழிலாளர்களின் கடமையாகும். அதேபோன்று ஒவ்வொரு தனி வீடுகளுக்கும் இடையில் 20 தொடக்கம் 30 அடி நிலப்பரப்பு வித்தியாசம் வைத்தே நவீன முறையில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

இன்று தோட்டப்பகுதி இளைஞர்களை சுயதொழில் ஊக்குவிக்கவும், பாடசாலைகளுக்கு தளபாடங்களை வழங்கவும், பொருட்கள் கையளிக்கப்படுகின்ற நிலையில் இந்த பொருட்களை கையளிக்க வேண்டாம் என அமைச்சரிடம் சொல்லுங்கள் என்று முன்னாள் அமைச்சரின் செயலாளர் ஒருவர் எனது அமைச்சு செயலாளரிடம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

அது மட்டுமல்லாது எனது அமைச்சை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வோம் என கட்சி தலைவர்களின் கூட்டத்திலும் பேசப்பட்டதையடுத்து இவர்களை வரவேற்க ஒவ்வொரு அமைச்சிலும் அதிரடி படை மற்றும் பொலிஸாரை அரசாங்கம் அமர்த்தியுள்ளது.

வாய்ச் சவாலுக்கு பேசி பயனில்லை. முடிந்தால் மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும். இல்லையேல் ஒதுங்கி நிற்க வேண்டும் என தெரிவித்த அவர், பெருந்தோட்ட காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு வருடம் ஒன்றிற்கு 500 ரூபாய் கம்பனிகள் வரிபணமாக செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காடுகளாக்கப்பட்டிருக்கும் பெருந்தோட்ட காணிகளுக்கும் தண்டப்பணம் அறவிட வேண்டும் என நான் தெரிவிக்கின்றேன். பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அரசாங்கம் பல்வேறு தொழில் விடயங்களுக்காக மானியங்கள் வழங்கப்படுவதாக ஒழிந்திருக்கும் சில விடயங்கள் இப்போது வெளிவந்துள்ளது.

அதேநேரத்தில் அரசாங்கத்தின் அரசியல் சூழ்நிலை சுமூகமான நிலைக்கு வரும் போது இவைகள் தொடர்பாக நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களிடம் அமர்ந்து பேசவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.