முல்லைத்தீவையும் ‘கஜா’ சூறாவளி தாக்கும்! அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், அதற்கான முன்னாயத்த ஏற்படுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக, 427 குடும்பங்களைச் சேர்ந்த 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் முழுமை -யாக 90 வீடுகளும் பகுதியளவில் 18 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைய, பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு, சமைத்த உணவு வழங்கப்பட்டு வரும் அதேவேளையில், அவர்களுக்கான உலர் உணவு வழங்குவதற்கு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, 5 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், 10 குளங்களில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட குளக் கட்டுக்களைப் புனரமைக்கும் பணிகளில் படையினர், கமக்கார அமைப்புகள், கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்பன இணைந்து ஈடுபட்டதாகத் தெரிவித்ததுடன், நித்தகை குளக்கட்டின் புனரமைப்புப் பணிகளை மாத்திரம் முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், நீரைத் தேக்கி வைத்திருக்கின்ற செயற்பாட்டை நீர்பாசனத் திணைக்களமும் படையினருடன் இணைந்து முன்னெடுத்ததாகத் தெரிவித்த அவர், ஏனைய குளங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த நிலை இயல்பு நிலைமையில் காணப்படுகின்ற இத்தருணத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஏற்படக்கூடுமென, அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த எச்சரிக்கைக்கமைய, அதற்கான முன்னாயத்த ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.