பாராளுமன்றம் கூடியது – அமளி துமளி – முழு விபரம் இணைப்பு!

image_pdfimage_print

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானது முதல் அமளி துமளியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுக்காக இன்று (16) வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

பாராளுமன்றத்தில் ​நேற்று கூடிய போது அமைதியற்ற சூழ்நிலை தோன்றியதுடன் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. மேலும் கூரிய ஆயுதங்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணடப்பட்டமையால் இன்று சபை அமர்வுக்காக வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாலித தெவரப்பெரும ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த இரண்டு உறுப்பினர்களும் நேற்று (15) பாராளுமன்றத்திற்கு கத்தி எடுத்துக் கொண்டு வந்ததற்கு எதிராகவே ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக பொலிஸார் பாராளுமன்றத்திற்குள் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் பாராளுமன்றத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

மேலும், சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆசனத்தை ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுற்றி வளைத்ததுடன் அருந்திக பெர்ணான்டோ அந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.