வவுனியாவில் சிறுவனின் சடலத்திற்கு உரிமைகோரும் இரு உறவினர்கள்!

வவுனியாவில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்களில் 14வயதுடைய உ.றொசான் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தாய் தந்தை அற்ற இந்நிலையில் குறித்த சிறுவனின் சடலத்தினைப் பொறுப்பேற்பதற்கு சிறுவனின் தாயின் சகோதரர்களும், உறவினர்களும், தந்தையின் சதோரர்களும், உறவினர்களும் வவுனியா வைத்தியசாலையில் உரிமை கோரிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5மணியளவில் மரண விசாரணை அதிகாரி, பொலிசார் தலையிட்டு சடலத்தினை தந்தையின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதுடன் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8மணியளவில் சிறுவனின் தாயின் சகோதரர்கள், உறவினர்கள் சடலத்தை பொறுப்பேற்பதற்கும் இறுதிக்கிரியைகள் மேற்கொள்வதற்கும் இரு பகுதி உறவினர்களுக்கு பொலிசாரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சிறுவனின் பின்னணி: கடந்த யுத்த காலத்தில் சிறுவன் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளான் முச்சக்கரவண்டி சாரதியான தந்தை வன்னிப்பகுதிக்குச் சென்றபோது யுத்தம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தாய் குறித்த சிறுவனுடன் வன்னிப்பகுதியில் சிறிது காலம் வசித்து வந்துள்ளார். யுத்தத்தினல் தாயாரும் உயிரிழந்த நிலையில் வவுனியாவில் வசித்து வந்த தந்தையின் சதோதரர்கள், உறவினர்கள் குறித்த சிறுவனுக்கு ஜந்து வயது இருக்கும்போது பொறுப்பேற்று பராமரித்து வந்துள்ளனர்.

இதையடுத்து தாயின் சதோதரர்கள், உறவினர்களுக்கு ஆண் சகோதரர்கள் இன்மை காரணமாக குறித்த சிறுவனை தாங்கள் பொறுப்பேற்று பராமரிப்பதற்கு தந்தையின் உறவினர்களிடம் கோரியுள்ளனர். இந்நிலையில் இருதரப்பினரும் ஒரு இணக்கத்திற்கு வருவதற்கு முடியாமையினால் பொலிஸ் நிலையம் சென்று பொலிசாரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சிறுவனை தாயின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிறுவன் பராயமடைந்ததும் அவனே யாருடன் வசிப்பது என்பதை முடிவு செய்வது குறித்து முடிவினை எடுப்பதாக இருதரப்பினரும் தெரிவித்த நிலையில் சிறுவனை தாயின் உறவினர்கள் தாண்டிக்குளம் பகுதியில் பராமரித்து வந்துள்ளனர்.

வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் தரம் 8 கல்வி கற்று வந்த மாணவனே கடந்த வியாழக்கிழமை மாலை தனது மூன்று நண்பர்களுடன் பட்டக்காடு குளத்தில் குளிப்பதற்குச் சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

திருநாவற்குளம் இளைஞர்களினால் குளத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மருத்துவப்பரிசோதனையின் பின்னர் சடலம் தந்தையின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சாந்தசோலையிலுள்ள உறவினர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8மணியளவில் தாயின் உறவினர்கள் தாண்டிக்குளம் பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு சிறுவனின் சடலத்தினை பொறுப்பேற்று மாலை இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.