எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார் மகிந்த!

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தமது பதவியை துறக்கவுள்ளார் என நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இதுகுறித்தான அறிவிப்பு இன்று இரவு உத்தியோகபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தம்வசம் வைத்திருப்பதால், நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைவென்ற எம்.பியொருவரை பிரதம அமைச்சராக ஜனாதிபதி நியமிக்கவேண்டும். இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே, முன்கூட்டியே பதவியை துறக்க மஹிந்த தயாராகிவருகிறார்.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி நீக்கியபின்னர், இலகுவில் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என மைத்திரி, மஹிந்த கூட்டணி திட்டமிட்டிருந்தது. 113 எம்.பிக்களின் ஆதரவைப்பெறுவதற்கு பலவழிகளிலும் அக்கூட்டணி முயற்சிகளை முன்னெடுத்தது. எனினும், அவை கைகூடவில்லை. பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்திருந்தாலும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய சமரிலிருந்து மஹிந்த தரப்பு பின்வாங்கவில்லை.

இறுதிவரை பேரம் பேசும் அரசியலை முன்னெடுத்துவந்தது. எனினும், பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடுத்தே மஹிந்த – மைத்திரி கூட்டணிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைபலம் ஐக்கிய தேசியக்கட்சி வசமிருக்கின்றபோதிலும் அதற்கு அனுமதி வழங்குவதற்கு ஜனாதிபதி மறுப்பாரானால் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். விட்டுக்கொடுப்புடன் செயற்படாவிட்டால் மஹிந்தவின் வாக்கு வங்கியிலும் அது தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.

எனவேதான், ஜனநாயகத்துக்கும், நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில், நாட்டு மக்களின் நலன்கருதி, சர்வமதத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று பதவி துறக்கின்றேன் என்ற அறிவிப்பை மஹிந்த வெளியிடவுள்ளார். எனினும், இது குறித்து இன்னும் எவ்வித உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

அதேவேளை, மாற்றமொன்று இடம்பெறுவதாக இருந்தாலும் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு பின்னரே அது நடைபெறும் என்றும், ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்புடன் செயற்படாவிட்டால் மைத்திரியும் பின்வாங்கமாட்டார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவருகின்றது.