மட்டக்களப்பில் பொலிசார் இருவர் சுட்டுக்கொலை! படங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் நேற்று இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ரி 56 ரக துப்பாக்கிகளினால் குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு சென்றுள்ள கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர், புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரசன்ன, தினேஸ் என்னும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வி இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.