பரீட்சைக்கு குறுஞ்செய்தி மூலம் விடை வழங்கிய ஆசிரியையும் மாணவனும் கைது!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றிய வெளிவாரி பரீட்சாத்திக்கு தொலைபேசிமூலம் பதிலளிப்பதற்கு உதவிய ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பரீட்சாத்தியும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இடம்பெற்ற பரீட்சைக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வருகைத்தந்துள்ளதுடன், இதன்போது, இடம்பெற்றுக்கொண்டிருந்த ஆங்கில வினாத்தாளுக்கு குறித்த பரீட்சாத்தி பதிலளித்துக்கொண்டிருந்த விதம் தொடர்பில் பரீட்சை நிலைய மேற்பார்வையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பரீட்சாத்தி தொலைபேசிமூலமாக தகவல்களை பெற்று பதில் எழுதிவந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த பரீட்சாத்திக்கு மேலதிக வகுப்பு நடத்தும் ஆசிரியை ஒருவர் பதில்களை குறுந்தகவல்கள் மூலம் அனுப்பிவைத்தமை தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியை மற்றுமொரு நிலையத்தில் பரீட்சை மேற்பார்வையில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.