பாடசாலை மாணவர்கள் பயணித்த வேன் பள்ளத்துக்குள் பாய்ந்தது!

எல்ல வெல்லவாய வீதியில் 24 ஆவது மைல்கல் அருகில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் காதிர்காமத்திற்கு யாத்திரை சென்று மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருந்த வேளை வேன் ரக வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

மலை சரிவுகள் கொண்ட இந்த வீதியில் மேல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, வேன் ரக வாகனம் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகி பின்னோக்கி பயணித்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக எல்ல காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தியத்தலாவ மற்றும் பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதோடு, அதில் கவலைக்கிடமான மூன்று பேர் கண்டி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்திற்கு முகம் கொடுத்துள்ளவர்கள் வெலிமடை  அம்பகஸ்துவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பாடசாலைகளின் உயர்தர மாணவர்கள் என காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.