விசேட உரை ஒன்றை நிகழ்த்தி, விடைபெற்றார் மகிந்த!

பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தி அறிவித்துள்ளார்.

புதிய பிரதமரை நியமிப்பதற்காக ஜனாதிபதிக்கு சந்தர்ப்பத்தை வழங்கி, தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகியதாக மஹிந்த ராஜபக்ஷ கூறினார் என நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பிரதமர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டதுடன், சமய நிகழ்விலும் கலந்துகொண்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் விசேட உரையொன்றையும் நிகழ்த்தியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, நிலையான அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதை ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி என்பன தடுத்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் ஸ்திரமற்ற தன்மை தொடர்வதை தவிர்க்கும் நோக்கில், புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஜனாதிபதிக்கு வழங்கி தாம் பதவி விலகியதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார் என்றும் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம், மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய விசேட உரை, இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு வெளியிடப்பட உள்ளதாக அவரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.