முல்லைத்தீவில், சுகாதார தொண்டர்கள் நியமனம் தொடர்பில் பாராபட்சமும் அரசியல் செல்வாக்கும்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் பாரபட்சம் பார்கின்றனரா பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக சுகாதார தொண்டர்களாக சேவைசெய்து வந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்காத நிலையில் அவர்களின் விபரங்கள் மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளருக்கு பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களம் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த விபரம் கடந்த 2015 ஆம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டும் இதுவரை நியமனங்கள் இல்லாத நிலையில், அண்மையில் 121 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளரினால் விபரம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த விபரத்தில் நீண்ட நாட்களாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய பலரின் விபரங்கள் இல்லாது காணப்படுவதாகவும் புதிதாக பலர் அதில் இடம்பெற்றுள்ளதுடன் இவர்களுக்கான நேர்முகதேர்வு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய பலருக்க நேர்முக தேர்விற்கு அழைக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட சுகாதாரதொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளரிடம் கேட்டபோது நேர்முகதேர்வு எங்கு நடந்தது என்றும் யார் இதனை தெரிவு செய்தார்கள் என்று தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதில்குறிப்பாக புதிதாக உள்வாங்கப்பட்டவர்கள் அதிகளவில் சுமார் 38 பேர் வெலிஒயா, சம்பத்நுவர பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் 1994, 1996 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் என்றும் நியமன விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நீண்டகாலமாக சுகாதார தொண்டர்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றியும் இதுவரை நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில் தற்போது வந்துள்ள சுகாதார தொண்டர்கள் நியமனம் தொடர்பில் பாராபட்சமும் அரசியல் செல்வாக்கும் காட்டப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்த பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் இது தொடர்பில் தங்களுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.