கமல்ஹாசன் தயாரிப்பில் 3 திரைப்படங்கள் – தெறிக்கவிடும் தர்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தர்ஷன் 3 புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

நடந்து முடிந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தர்ஷன். ஒரு சினிமா ஹீரோவிற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டவர். குறிப்பாக பெண்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர். இவரே பிக்பாஸ் போட்டியின் முடிவில் முதல் பரிசை தட்டிச் செல்வார் என பலரும் நம்பினர். பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்களும் அவர்தான் வெற்றி பெறுவார் என தொடர்ந்து கூறிவந்தனர்.

ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக தர்ஷன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. விஜய் தொலைக்காட்சிக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.

அவரை சமீபத்தில் நேரில் வரவழைத்து கமல்ஹாசன் பேசியதாகவும், இந்தியன் 2 திரைப்படத்தில் தர்ஷன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் 3 திரைப்படங்களில் நடிக்க தர்ஷன் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அப்படத்தின் இயக்குனர்கள் மற்றும் மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி தர்ஷனின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.