குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு!

குரு பெயர்ச்சி பலன்கள் 2019

இந்த ஆண்டிற்கான குரு பெயர்ச்சி வருகின்ற 29:10:2019 காலை 3:49 க்கு கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசி, 1ஆம் பாதம், மூலம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். ஒவ்வொரு ராசிக்கும் இதற்கான பிரத்யேகமான பலன்களை இங்கு காண்போம் வாருங்கள்.

மேஷம்: மேஷ ராசிக்கு குருவானவர் 9ஆம் இடத்திற்கு வருகிறார். 9ஆம் இடம் என்பது தொழிலை விட்டு போனவர்கள், குடும்பத்தை விட்டு போனவர்கள், வாழ்க்கையே வேண்டாம் என்று சலித்து போனவர்கள் எல்லாம் மீண்டும் வந்து செல்வாக்கு பெறுவார்கள். குருவால் மேஷ ராசி காரர்கள் அதிக பலன் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

ரிஷபம்: அஷ்டமாதிபதி அஷ்டமத்தில் வருகிறார் எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசி இது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது தான் நன்மை பயக்கும். அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்ய நினைத்தால் உங்களுக்கே அது திரும்பிவிடும். ஏற்கனவே சனி இருக்கிறார் எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்: மிதுன ராசிக்கு ஜென்மத்தில் ராகு இருக்கிற சமயம் குரு வருகிறார். ஏற்கனவே சனி மற்றும் கேது இருக்கிறார். குரு பார்வை படுவது நல்லது. சுப காரியங்கள் அனைத்தும் நடைபெறும். ஆனால் மிதுன ராசிக்கு திருமணத்தில், திருமண உறவுகளில் பாதிப்பை கொடுப்பார்.

கடகம்: சந்திரனின் ஆட்சி பெற்ற கடக ராசிக்கு 5ஆம் இடத்தில் இருந்து 6க்கு உரியவர் 6ஆம் இடத்திற்கு வருகிறார். கடன் அமைப்பில், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பகைவர்களின் தொல்லை இருக்கும் அதனால் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படலாம் எனவே மன அமைதிக்கு யோகா, மூச்சு பயற்சிகள் மேற்கொள்வது நல்லது. ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது மிகவும் நல்லது.

சிம்மம்: இதுவரை 4ஆம் இடத்தில் இருந்த குரு 5 ஆம் இடத்திற்கு வருகிறார். சொந்த இடமான 5ஆம் இடத்தில் குரு வருவதால் மிகுந்த நல்ல பலன்களை பெறுவார்கள். மேஷ ராசிக்கு எப்படி நற்பலன்களை தருகிறதோ அதே போல் சிம்ம ராசிக்கும் வாரி வழங்குவார். வீடு வசதி விஷயத்தில் ஏற்றமாக இருக்கும். பூர்வீக சொத்து மற்றும் பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. கர்ப்பிணிகள் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் நல்ல அதிர்ஷ்டத்தை தர போகிறார்.

கன்னி: கன்னி ராசிக்கு சனி மற்றும் கேதுவுடன் தற்போது 3ஆம் இடத்தில் இருந்து 4காம் இடத்தில் குரு வருவதால் குடும்பத்தில் உள்ள பெற்றோர், பெரியோர் உறவினர்களை விட்டு தொலை தூரம் செல்வது அல்லது சண்டையிட்டு பிரிவது நிகழும். அன்னியர்களிடம், இரத்த பந்த உறவுகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரத்தில் பாதிப்பு உள்ளவர்கள் மருந்து மாத்திரையுடன் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

துலாம்: துலாம் ராசிக்கு 2ஆம் இடத்திலிருந்து 3ஆம் இடத்திற்கு குரு வருவதால் மனதில் குழப்பம் ஏற்படும். மன தைரியம் குறையும் எனவே எதையும் நிதானத்துடன் செய்வது நல்லது. ஒரு முறைக்கு இரு முறை ஆலோசித்து செயலாற்றுவது நன்மை பயக்கும்.

விருச்சிகம்: ஜென்ம குரு மாறுகிறது. 2ஆம் இடத்திற்கு வருகிறார் எனவே காது, மூக்கு, தொண்டை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடன் எல்லாம் வந்து சேரும் அமைப்பு ஏற்படும். வார்த்தைகளில் இனிமை தேவை. நீண்ட காலமாக மருத்துவ மனையில் இருந்தவர்கள் கூட மீண்டு வரக்கூடும். உத்யோகத்தில் புதிய முயற்சி மேற்கொண்டால் நல்ல பலன்களை காணலாம்.

தனுசு: தனுசு ராசிக்கு ஏற்கனவே ஜென்ம சனி இருக்கிறது. கேது மற்றும் 7ஆம் இடத்தில் ராகு இருக்க கூடிய கால கட்டத்தில் ஜென்ம குரு வருவதால் கண்டிப்பாக ஒரு மாற்றம் ஏற்படுத்த வேண்டியிருக்கும். நீங்கள் படுக்க கூடிய இடத்தையாவது மாற்ற கொண்டால் பெரிய பிரச்சினைகள் வராமல் இருக்கும். தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். புத்திர பாக்கியம் கிடைக்கும். சுபகாரியங்கள் நடைபெறும். தந்தை வழி உறவுகளிடம் ஒற்றுமை ஏற்படும். தெய்வ வழிபாடு அதிகமாக இருக்க வேண்டிய ராசி இது.

மகரம்: 11ஆம் இடமான இலாப ஸ்தானத்தில் இருந்த குரு 12ஆம் இடத்திற்கு வருகிறார். விரையங்கள் ஏற்படும் எனவே சுப விரையங்கள் இந்த கால கட்டத்தில் மேற்கொள்வது அவசியம் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று இருந்தால் வீண் செலவு ஏற்படும். விலை உயர்ந்த பொருள்களை கையாள்வதில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்: 10ஆம் இடத்தில் இருந்த குரு 11ஆம் இடத்திற்கு வருகிறார் எனவே தைரியம் ஏற்படும். அனைத்தும் நன்மையாக அமையும். தொழிலில் அனுகூலம் உண்டாகும், பிள்ளைகள் விஷயத்தில் படிப்பு, தொழில், திருமணம் போன்றவற்றில் உங்களால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் சுபீட்சம் ஏற்படும் பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள்.

மீனம்: 9ஆம் இடத்தில் நன்மை செய்து கொண்டு இருந்த குரு தற்போது 10ஆம் இடத்திற்கு வருகிறார். அங்கு ஏற்கனவே சனி, கேது இருக்கிறார் இப்போது குருவும் வருகிறார். ராசி நாதன் 10ஆம் இடத்தில் வருவதால் தொழில் விஷயத்தில் கவனம் தேவை. தொழில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை. வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை ஏற்படுத்தும். குடும்ப பிரச்சினைகள், பூர்வீக சொத்து பிரச்சினைகள், வழக்கு பிரச்சினைகள் எல்லாம் தீரும். எதிரிகளிடம் சமாதானம் ஏற்படும்.

இந்த குரு பெயர்ச்சியால் அதிகமான நற்பலன்களை பெறக்கூடிய ராசி காரர்கள் மேஷம், சிம்மம், கும்பம் ஆகியவை ஆகும். அடுத்ததாக மிதுனம், விருச்சிகம் ஆகியவை சிறப்பான பலனை அடையலாம்.