சட்டமா அதிபர் உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
இதன்படி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கொங் அமரசிறி குமார சேனாரத்ன, செட்டிக்குளம் முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் ரொஹான் சஞ்சீவ, பொலிஸ் அத்தியட்சகர்களான ஹரிஸ் சந்திர பண்டர மற்றும் அஜித் பிரியதர்ஷன ஹேரத் ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவுக்கு எதிராக சட்டக் கோவை 298 கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாகவும் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில், ஜயமினி புஸ்பகுமார என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார்.
ஸ்ரீரங்கா உள்ளிட்ட சிலர் மன்னார் நோக்கிப் பயணித்த போது, செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஸ்ரீரங்கவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
