இந்தியா:

தமிழகத்தில் பசுவின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், அதன் பின் சிகிச்சை செய்த போது, வயிற்றின் உள்ளே இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவருக்கு சொந்தமான பசு ஒன்று, சாணம் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளது.
இதனால் அவர் அருகில் இருக்கும் காலநடை மருத்துவரிடம் கொண்டு சென்று பார்த்த போது, வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் பசுவை முனிரத்தினர் வேப்பேரிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பசுவை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் கழிவுப்பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்த மருத்துவர்கள், சுமார் ஐந்தரை மணிநேரம் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் பசுவின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மருத்துவர்கள், அது சுமார் 52 கிலோ இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
2 ஆண்டுகளுக்கும் மேலாக பசுவின் இரைப்பையில் தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் தங்கி இருந்துள்ளது. பசுவின் உணவு என்பது புல், மரத்தழைகள் தான். ஆனால் அந்த நிலை முற்றிலும் மாறி பசுவின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கிலோ கணக்கில் அகற்றப்பட்டிருப்பது பேராபத்தின் தொடக்கமாகவே என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
