டிப்பர் வாகனம் ஹைஏஸ் வாகனத்துடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி ஏ9 வீதியில் 156ம் கட்டை பகுதியில் நேற்றுமாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.
விபத்தில் ஹைஏஸில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
எனினும் அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் வசாவிளானைச் சேர்ந்த கதிர்பிள்ளை இரத்தினம் என்பவரே உயிரிழந்தவராவார்.
படுகாயமடைந்தவர்களில் 30 வயது குடும்ப பெண்ணுடன் அவரது ஒன்றரை வயது குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த ஹைஏஸ் வாகனத்தை எதிர் திசையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையால் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
