ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த இலங்கை தமிழர்கள்! விமானத்தில் பயணிக்க உதவிய பெண்…நெகிழ்ச்சி சம்பவம்!

image_pdfimage_print

இலங்கை தமிழர்களான இருவர் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு பாஸ்போர்ட் பெற்று தந்து பெண் அதிகாரி தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த மீனவர்களான சக்திவேல் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் மீன் பிடித்த புகாரில், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்‍கப்பட்டிருந்தனர்.

பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து தகவலறிந்த சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் ஜெயந்தி, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் உதவியுடன் ஆவணங்களை தயார் செய்தார்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ராஜ்குமார் மற்றும் சக்திவேலை விமானத்தில் ஏற்றி ஜெயந்தி இலங்கைக்கு வழியனுப்பி வைத்தார்.

இதற்கு முன்னர் இருவரும் அளித்த பேட்டியில், எங்கள் மீது சுமத்தப்பட்ட புகார் பொய் என நாங்கள் நிரூபித்த பின்னரே விடுதலை செய்யப்பட்டோம்.

ஆவணங்கள் இன்றி தவித்த எங்களுக்கு எல்லா உதவியும் செய்த ஜெயந்திக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக நெகிழ்ச்சியோடு கூறினர்.