குழந்தையை மீட்க 48 மணி நேரத்திற்கும் மேலாக போராடும் மீட்பு படையினர்! களத்திற்கு வந்த அதிசக்தி வாய்ந்த இரண்டாவது ரிக் இயந்திரம்!

சென்னை!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியின் தன் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் நேற்று முன்தினம் மாலை 05:30 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 47 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதாவது ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம் போல் மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதன்படி ரிக் இயந்திரம் மூலம் தோண்டும் பணி இன்று காலை 6:30 மணியளவில் தொடங்கியது. முதல் 15 நிமிடத்தில் 3 அடி ஆழம் அளவுக்கு தோண்டப்பட்டது.

அடுத்தடுத்து 10 அடி வரை விரைவாக தோண்டப்பட்டது. ஆனால் அதன் பின் தோண்டுவதில் தான் சிக்கல் எழுந்தது. 10 அடிக்கு கீழே பாறைகள் வந்துவிட்டதால் ரிக் இயந்திரத்தால் பாறைகளை எளிதாக தோண்ட முடியவில்லை. இதனால் 9 மணி நேரத்தில் 35 அடி வரை மட்டுமே தோண்ட முடிந்தது.

பாறைகள் இருப்பதால் குழித் தோண்டும் பணி தாமதமானது. இதனைத்தொடர்ந்து ராமநாதபுரத்திலிருந்து அதிக திறன் கொண்ட மற்றொரு இயந்திரத்தை நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு வர மீட்புப் படையினர் திட்டமிட்டனர். இதுவரை தோண்டப்பட்டு வந்த ரிக் வாகனம் 150 நியூட்டான் திறன் கொண்டது. இந்த வாகனம் கிராமத்திற்குள் வருவதற்கே பல்வேறு சிரமங்களை சந்தித்தது.

இந்த ரிக் வாகனத்தின் மூலமாக சுரங்க பணிகள், மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை வைத்து பாறைகளை தோண்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் 320 நியூட்டான் திறன் கொண்ட இரண்டாவது ரிக் வாகனம் ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது இயந்திரம் முதல் இயந்திரத்தை விட 3 மடங்கு அதிக திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.