சுர்ஜித்தை மீட்க அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் தமிழகம் வருகை!

திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் சுர்ஜித்தை மீட்க பஞ்சாபில் இருந்து விவசாய தொழில்நுட்ப நிபுணர்கள் இருவர் இன்று இரவு தமிழகம் வரவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்க 74 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குழந்தை 88 அடியில் சிக்கியுள்ள நிலையில், அதிநவீன போர்வெல் இயந்திரத்தால் 55 அடியை எட்டுவதே சவாலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் குழந்தையை மீட்பதற்காக பஞ்சாபில் இருந்து வீரேந்திர சிங், குருஜிந்தர் சிங் என்கிற அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் 2 பேர் தமிழகம் வர உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அவர்கள் இருவரும் இன்று இரவு 11 மணிக்கு விமானம் மூலமாக திருச்சி வருகின்றனர். ஏற்கெனவே, பஞ்சாபில் 3 குழந்தைகளை இதுபோன்று ஆழ்துளை கிணறுகளில் இருந்து மீட்ட அனுபவம் வாய்ந்தவர்கள்.

சுர்ஜித்தை மீட்க தமிழக அரசு சார்பாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவையும் அரசு ஏற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.