ரோபோ மூலம் சுர்ஜித் தலையை பிடிக்க முயன்றேன்… நடந்ததை விளக்கிய தனி ஆளாக போராடிய நபர்!

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுர்ஜித்தை மீட்க தனது ரோபோட் இயந்திரம் மூலம் இறுதிவரை போராடிய மணிகண்டன் ஏன் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்பது குறித்து விளக்கியுள்ளார்.

குழந்தை சுர்ஜித்தை மீட்க பல முயற்சிகள் நடந்தன. அதில் ஒன்று தான் ரோபோட்டிக் இயந்திரம் மூலம் துாக்குவது.

இதை வடிவமைத்தவர் மதுரையை சேர்ந்த மணிகண்டன் (44).

இவர் ஏற்கனவே சங்கரன்கோவிலில் ஆழ்குழாயில் சிக்கிய குழந்தையை இந்த கருவி மூலம் மீட்டு தமிழகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர். ஆனால் நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித்தை மீட்கும் இவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

இது குறித்து மணிகண்டன் கூறுகையில், கடந்த 25ஆம் திகதி இரவு 8 மணிக்கு நடுகாட்டுப்பட்டியை அடைந்தேன்.

ஆழ்குழாயின் சுற்றளவுநாலரை இன்ச் ஆகஇருந்தது. ஆனால் நான் வடிவமைத்த ரோபோட்டிக் இயந்திரம் சுற்றளவு 8 இன்ச் ஆகும்.

இதனால் ஆழ்குழாயில் இயந்திரத்தை செலுத்துவது சிரமமாக இருந்தது.

பின்னர் இரவு மணப்பாறையில் உள்ள லேத் பட்டறைக்கு சென்று 8 இன்ச் அளவை நாலரை இன்ச் அளவிற்கு குறைத்து அதிகாலை 3:00 மணிக்கு எடுத்து வந்தேன்.

அதற்குள் மாநில, தேசிய பேரிடர் மேலாண்மை வீரர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களுடன் நானும் என்னால் ஆன முயற்சியை மேற்கொண்டேன்.

குழியில் சிறிதுகூட இடைவெளி இல்லாதது சவாலாக இருந்தது. ரோபோட்டிக் இயந்திரத்தால் சுர்ஜித் தலையை பிடிக்க முயன்றும் முடியவில்லை. அதற்குள் படிப்படியாக குழந்தை கீழே சென்றுவிட்டது.

இதுவரை நான் மேற்கொண்ட மீட்பு பணிகளில் ஆழ்குழாய் சுற்றளவு கொஞ்சம் பெரியதாக இருந்தது. அதன் அடிப்படையில்தான் ரோபோட்டிக் இயந்திரத்தை உருவாக்கினேன்.

வருங்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது.

மீறி நடக்கும் பட்சத்தில் மீட்பதற்காக பல அளவுகளில் ரோபோட்டிக் இயந்திரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.