ஒரு வருடத்தில் கசந்த காதல் திருமணம் : 2வது மனைவியை தேடும் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரி!!

ஒரு வருடத்தில் கசந்த காதல் திருமணம்

காதலித்து திருமணம் செய்துகொண்ட முதல் மனைவி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை கட்டாயப்படுத்தி விவாகரத்து செய்ய முயற்சித்த ஐபிஎஸ் பயிற்சி அதிகாரி மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வர ரெட்டி என்பவர் ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது, பிருதுலா பவானா என்கிற இளம்பெண்ணுடன் பழக ஆரம்பித்துள்ளார்.

நாளடைவில் நட்பு காதலாக மாறி இருவரும் 9 வருடம் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள தன்னுடைய பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள், அதனால் திருமணம் செய்துகொண்டு அதன்பின்னர் வீட்டிற்கு தெரியப்படுத்தலாம் என மகேஸ்வரா கூறியுள்ளார்.

அதற்கு பிருதுலா பவானாவும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, வீட்டிற்கு தெரியாமல் ஏப்ரல் 2018ல் இருவரும் திருமணம் செய்துகொண்டு செகந்திராபாத் பத்மராவ் நகரில் ஒன்றாக வாழத் துவங்கியுள்ளனர்.

சிறிது நாட்கள் கழித்து பவானாவின் பெற்றோர் அவர்களுடைய திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும், மகேஸ்வர ரெட்டி தனது பெற்றோரிடம் திருமணம் குறித்து கூறாமலே இருந்துவந்துள்ளார். பெற்றோரிடம் அறிமுகப்படுத்துமாறு பாவனா கூறும் சமயங்களில் எல்லாம், ஏதேனும் ஒரு காரணம் கூறி உணர்ச்சிவசப்பட்டு மகேஸ்வர ரெட்டி சமாளித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் ஐபிஎஸ் தகுதி பெற்ற பிறகு, மகேஸ்வர ரெட்டியின் செயல்பாடுகள் முழுவதும் மாறியுள்ளது. தன்னுடைய பெற்றோர் திருமணத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், ரகசியமாக விவாகரத்து செய்வதற்கு பணம் தருவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் பெற்றோரின் சம்மதத்துடன் அவர்களுடைய சமூகத்தை சேர்ந்த வேறு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கு பிருதுலா பவானா மறுப்பு தெரிவித்ததால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் து ன்புறுத்திய மகேஸ்வர ரெட்டி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இதனால் ம னமுடைந்த பிருதுலா பவானா செப்டம்பர் மாதம் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை அறிந்துகொண்ட மகேஸ்வர ரெட்டி, தனது பெற்றோருடன் பேசுவதாகவும், திருமணம் குறித்து கூறுவதாகவும் வாக்குக்கொடுத்து பிருதுலாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் அடுத்த சில நாட்களில் தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு மகேஸ்வரா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் பிருதுலா கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், பிருதுலா தன்னுடைய திருமண புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு உதவி கேட்டு வருகிறார்.