சுர்ஜித்க்கு பதிலாக பரப்பப்படும் எங்கள் மகனின் புகைப்படம் – பெற்றோர் வேதனை!

image_pdfimage_print

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்-க்கு பதிலாக, நித்திஷ் என்ற சிறுவனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் நித்திஷின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ம் தேதி மாலை சுர்ஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன், தனது வீட்டிற்கு அருகே உள்ள சரியாக மூடப்படாத ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான்.

4 நாட்களாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும், சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. நேற்று முன் தினம் அதிகாலை, சிறுவன் சடலமாக மீட்கப்பட்டு, இறுதி சடங்குகளுக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டான்.

சுர்ஜித் மீட்பு பணிகளின் போது தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தை புறக்கணித்து, சுர்ஜித்துக்காக பிரார்த்தித்தனர்.

ஆனால், சுர்ஜித்தின் மரணம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. சோகத்தில் மற்றொரு சோகமாக சுர்ஜித்துக்கு பதிலாக வேறு ஒரு சிறுவனின் புகைப்படங்கள், டிக்டாக் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவியது.

வேலூர் மாவட்டம் வெட்டுவானம் அடுத்த கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த முனிவேல் – சுகன்யா தம்பதியினரின் இரண்டு வயது மகனான நித்திஷின்புகைப்படங்கள் தீயாக பரவியது. இதில் நித்திஷ் நடனம் ஆடும் வீடியோக்கள் சுர்ஜித் என்ற பெயரில் பரவியது. பலரும் தங்களது ஸ்டேட்டஸ் ஆக நித்திஷ் ஆடும் வீடியோவை வைத்திருந்தனர்.

இதனால், நித்திஷின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். உயிருடன் உள்ள தனது மகன் நித்திஷ் புகைப்படங்கள் இறந்துவிட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று நித்திஷின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.