கனடாவில் பெரும் கார்த்திருட்டில் ஈடுபட்ட யாழ்ப்பாண சகோதரர்கள் சிக்கினர்!

கனடாவில் பெரும் கார்த்திருட்டில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்து செல்ல முயன்றபோது, வாகனத்தின் உரிமையாளர் பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து, இரண்டு தமிழ் இளைஞர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் எமகாதக திருட்டில் ஈடுபட்ட விடயம் அம்பலமானது.

நமது ஊர்களில் சங்கக்கடைகளில் நிவாரணத்திற்கு வரிசையில் முந்திக்கொள்ள அடிபிடிப்பட்ட நினைவு உங்களிற்கிருக்கும். கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, இழுத்து செல்லும் நிறுவனங்களும் கிட்டத்தட்ட அப்படித்தான். விபத்தொன்று நடந்தால், அந்த வாகனத்தை இழுத்துச் செல்ல பல நிறுவனங்களின் வாகனங்கள் அங்கு பாய்ந்து விழுந்து வரும்.

ஸ்கார்பாரோவைச் சேர்ந்த கபிலன் விக்னேஸ்வரன் (24), நகுல் விக்னேஸ்வரன் (30) ஆகிய இருவரும் விபத்தில் சிக்கிய வாகனங்களை இழுத்துச் செல்லும் நிறுவனமொன்றை நடத்தியுள்ளனர்.

அண்மையில், கனடாவின் ஈஸ்ட் எக்லிண்டன் அவென்யூ மற்றும் வார்டன் அவென்யூ அருகே விபத்தில் சிக்கிய வாகனத்தின் உரிமையாளர், வாகனத்தை இழுத்துச் செல்ல நிறுவனமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்குள் அந்த பகுதிக்கு வந்த தமிழ் சகோதரர்கள் தமது இழுத்து செல்லும் வாகனத்தில், விபத்திற்குள்ளான வாகனத்தை கொழுவியுள்ளனர்.

வாகன உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அதை பொருட்படுத்தாமல் இழுத்துச் சென்றனர். இது குறித்து வாகன உரிமையாளர், பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

மான்வில் வீதியில் உள்ள கபி ஓட்டோ இன்க் நிறுவனத்திற்கு அந்த கார் கொண்டு செல்லப்பட்டிருந்தது. அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளை நடத்தினர். ஆரம்பத்தில் அங்கு பொலிசார் உள்நுழைய, உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

பொலிசார் அங்கு நடத்திய சோதனையில் திருடப்பட்ட இரண்டு விலை உயர்ந்த சொகுசுக்கார்கள் அங்கு மீட்கப்பட்டன. தமிழ் சகோதரர்களே அவற்றை திருடினார்கள் என்பது விசாரணைகளில் தெரிய வந்தது. 2015 பி.எம்.டபிள்யூ எம் 4 மற்றும் 2017 ஃபெராரி 4 ஜிஎஸ் ஆகிய கார்களே மீட்கப்பட்டன.

வாகன திருட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அழைக்கும்போது முன்னிலையாக வேண்டுமென்ற நிபந்தனையுடன் அவர்கள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து, விபத்தில் சிக்கிய வாகனங்களை கட்டியிழுக்கும் நிறுவனங்கள் தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள கனடிய பொலிசார், சில அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளனர்.