மகளுக்குப் பிடித்த பாடலை இறுதிச்சடங்கில் பாடிய தந்தை: கண்கலங்க வைத்த சம்பவம்!

தமிழகத்தின் சென்னையில் கிணற்றுக்குள் விழுந்து மரணமடைந்த இளம்பெண்ணின் இறுதிச்சடங்கில் அவருக்குப் பிடித்த பாடலை தந்தை பாடியது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

சென்னை அருகே பட்டாபிராம் பகுதியில் குடியிருந்து வருபவர் ஓய்வு பெற்ற காவலரான தாமஸ்.

இவரது மகள் மெர்சி என்பவரே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தமது வருங்கால கணவர் அப்புவுடன் கிணற்றுக்குள் இறங்கி புகைப்படம் எடுக்கும் போது தண்ணீரில் தவறிவிழுந்து மரணமடைந்தவர்.

இந்த நிலையில், மெர்சியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அப்போது காவலர் தாமஸ், தன்னுடைய மகளுக்குப்பிடித்த பாடலைப் பாடியுள்ளார்.

அதைக் கேட்டவர்களும் கண்ணீர்மல்க அந்தப்பாடலைப் பாடியுள்ளனர். இதனிடையே கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் தத்தளித்த பொறியாளர் அப்புவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மெர்சி இறந்த தகவல் 5 ஆம் திகதிதான் அப்புவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டதும் அவர் கதறித் துடித்துள்ளார்.

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குவந்த அப்பு, மெர்சியின் சடலத்தைப் பார்த்து கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

கல்லறைத் தோட்டத்தில் மெர்சியின் முகத்தைப் பார்க்க முடியாத அவர் சோகத்தோடு வீடு திரும்பினார் என கூறப்படுகிறது.