விரைவில் கின்னஸ் சாதனை படைக்கபோகும் இலங்கை வாழ் இரட்டையர்கள்! குவியும் வாழ்த்துக்கள்!

உலகளவில் அதிகம் இரட்டையர்கள் பங்குபெறும் கூட்டத்தை நடத்த இலங்கை வாழ் இரட்டையர்கள் தயாராகி வரும் நிலையில் அது தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இலங்கை வாழ் இரட்டையர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இரட்டையர்கள் அமைப்பின் கூட்டம் கொழும்பில் நடைபெற்ற நிலையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இரட்டையர் அமைப்பு கடந்த 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் அதன் தலைவர்களாக உபுலி கமகே மற்றும் ஷமலி கமகே ஆகியோர் செயல்படுகின்றனர்.

இருவரும் கூறுகையில், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி உலக நாடுகளிலுள்ள இரட்டையர்களை இலங்கைக்கு அழைத்து, மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் எங்களின் 28,000 உறுப்பினர்களோடு பிற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற இரட்டையர்களும் கலந்துகொள்வர்.

இம்மாநாட்டின் மூலம் இரட்டையர்களை அதிகளவில் ஒன்று கூட செய்து கின்னஸ் சாதனை படைக்க தயாராகி வருகிறோம்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இரட்டையர்கள் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருவார்கள்.

இந்த மாநாட்டில் பங்குகொள்ளும் இரட்டையர்கள் 8 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என கூறியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பூரக்க செனவிரத்ன மற்றும் மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன ஆகிய இரட்டையர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அவர்கள் கூறுகையில், உலகளவில் ராணுவத்தில் எங்களை போல இரட்டையர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி வகிப்பதாக தகவல் இதுவரை கிடைக்கவில்லை, எனினும் மாநாட்டின் போது இந்த விடயம் உறுதிப்படுத்தப்படும் என கூறியுள்ளனர்.

ஒரே வைத்தியசாலையில் தாதியர்களாக பணியாற்றும் இரட்டையர்கள் கசுனி ரவீனா ஜயரட்ன மற்றும் இருணி மனிஷா ஜயரட்ன கூறுகையில், இரட்டையர்கள் என்பதனால் வைத்தியசாலையில் பணியாற்றுகின்றபோது, பிரச்சினை சற்று அதிகமாக காணப்படுகின்றது.

நோயாளிகள், வைத்தியர்கள், சக ஊழியர்கள் என அனைவரும் எங்களை மாற்றி அடையாளப்படுத்திக் கொள்வார்கள். எங்களில் ஒருவர் தவறு செய்தால் மற்றொருவர் தண்டனை அனுபவித்த நாட்களும் இருக்கின்றன.

எனினும், நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளனர்.

இரட்டையர்கள் சந்திப்பு தொடர்பாக இலங்கை அரசிடம் இந்த அமைப்பு தகவல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.