100அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை உயிரோடு மீட்க முடியவில்லை. 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த இந்த சிறுவனை அதிர்ஷ்டவசமாக மீட்டது எப்படி?

இந்தியாவின் மகாரஷ்டிரா மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் ரித்தேஷ் சோலங்கி என்ற 6 வயது சிறுவன் நேற்று காலை 9 மணியளவில் தவறி விழுந்தான். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சிறுவன் ரிதேஷ் 50 அடிக்கும் அதிகமான ஆழத்தில் சிக்கியதாக தெரியவந்ததையடுத்து மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். அவன் உள்ளே இருக்கும் போது சாப்பிட பிஸ்கெட் கொடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சிறுவன் ரிதேஷை அங்கிருந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சிறுவனின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரித்தேஷ் எப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்தான் என விசாரிக்கப்பட்டது.

இதில் அவன் பெற்றோர் கூலி தொழிலாளிகள் என்பதும், அவர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் தனியாக விளையாடி கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றுக்குள் ரித்தேஷ் விழுந்ததும் தெரியவந்தது.

மேலும் சிறுவன் உள்ளே விழுவதை பார்த்த அங்கிருந்த நபர் கத்தியபடி மற்றவர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

கடந்த மாதத்தின் இறுதியில், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுர்ஜித் என்ற குழந்தை 82 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.