மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட கன்னி ராசிக்காரர்களே….2020 இல் ராகு சில சங்கடங்களையும் தரப்போகிறாராம்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் கன்னி ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம்.

மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த வருடம் உங்களுக்கு பல நன்மைகளையும் சில சங்கடங்களையும் கொடுக்கப் போகின்றது. சனி, குரு இருவரும் உங்களுக்கு ஆட்சி பலத்துடன் இருந்து பல நன்மைகளை கொடுக்கப் போகிறார்கள்.

தற்சமயம் 10ல் ராகுவும் 4-ல் கேதுவும் இருக்கிறார்கள். 2020 செப்டம்பரில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியில் 9ல் ராகுவும் 3ல் கேதுவும் இடம் பெயர்வதால், கேது நன்மையையும், ராகு சில சங்கடங்களையும் தரப்போகிறார்.

மற்றபடி உங்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக அமையும். உங்கள் வருமானம் சீராக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.

குடும்பத்தில் சிறு சிறு கஷ்டங்கள் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு கொஞ்சம் கடினமான காலம் தான் இது. உங்கள் கணவரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கணவன் மனைவிக்கிடையே பிரச்னை வர வாய்ப்பு உள்ளதால் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளால் சங்கடம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

மாணவர்கள் – 4ல் உள்ள சனி பகவான், 5ம் இடத்தில் அமர போவதால் நீங்கள் கல்வி பயில்வதில் சிறுசிறு தடைகள் ஏற்படும்.

உங்கள் படிப்பில் கவனம் அதிகம் தேவை. கெட்ட சகவாசங்ளில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் சில சங்கடங்களை கொடுத்த சனி உங்களுக்கு பல நன்மைகளையும் தரப்போகிறார்.

அதிக கவனத்துடன் ஈடுபடும்போது உங்கள் முயற்சியில் வெற்றி அடையலாம்.

வேலைவாய்ப்பு – 10 ஆம் இடமான மிதுன ராசியை குரு பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

இவ்வளவு நாளாக வேலைக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் நிச்சயம் வேலை கிடைக்கும்.

சனி பார்வை 2லும், 11லும் உள்ளதால் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் கிடைக்காது.

திருமணம் – சனிபகவான் 5ல் இருந்து 7ஆம் இடத்தை பார்ப்பதால், திருமணத்தில் தடைகளும், மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவசரமாக எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம்.

பெரியோர்களின் ஆலோசனைபடி, நடந்து கொள்வதன் மூலம் சங்கடங்களை தவிர்க்கலாம். கணவன்-மனைவி இடையே சங்கடங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதால் அனுசரித்து செல்வது நல்லது.

தொழில் – சொந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்பவராக இருந்தால், உங்களுக்கு 10ல் குரு பார்வை இருப்பதால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

ஆனால் 11ல் சனி பார்வை இருப்பதால், உங்கள் லாபமானது மொத்தமாக கிடைக்காது. உங்கள் வாடிக்கையாளர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

உங்கள் தொழில் வியாபாரம் மேன்மையை நோக்கி செல்லக்கூடிய காலம் இது. எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். கடன் வாங்காதீர்கள்.

வேலைக்கு செல்பவர்களுக்கு – நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மரியாதை கூடும். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுவிட வேண்டாம்.

உங்கள் உழைப்பிற்கான ஊதிய உயர்வு வெகு விரைவில் உங்களை வந்து சேரும். பொறுமை அவசியம் தேவை.

பரிகாரம் – புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வழிபட வேண்டும்.

நீங்கள் பிறந்த கிழமையிலோ அல்லது புதன் கிழமையிலோ பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு வெல்லம் கொடுத்து வருவது சிறந்த பலனை அளிக்கும்.