முல்லைத்தீவில் மதுபோ தையில் வாகனத்தை செலுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்!இளைஞன் பலி!

image_pdfimage_print

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் ஹயஸ் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உடையார் கட்டுப்பகுதியில் மது அருந்திவிட்டு மதுபோ தையில் புதுக்குடியிருப்பு நோக்கி ஹயஸ் வாகனத்தை ஓட்டிச்சென்றவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞனை மோதித்தள்ளி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் வள்ளிபுனம் 17ஆம் கட்டையினை சேர்ந்த 19 வயதுடைய சந்திரன் ஜீவகுமார் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் தப்பிச்சென்ற வாகனம் வள்ளிபுனம் இனிவாழ்வு இல்லத்திற்கு முன்னால் இளைஞர்களால் மடக்கப்பட்டுள்ளது.

இதன்போது வாகனத்தினை செலுத்திய சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் வாகனத்தில் பொருத்தப்பட்ட கெமரா அகற்றப்பட்டு விட்டுள்ள நிலையில் வாகனத்தில் மதுபானம் மற்றும் சமைத்த உணவுகள் காணப்பட்டுள்ளதாகவும் பிரதேச இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கிராம இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி ஹயஸ் வாகனத்தினை சூழ்ந்துகொண்டதன் காரணத்தினால் சம்பவம் அறித்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தினை ஏற்படுத்தியவர்களை பாதுகாக்க முற்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

இருந்தும் வாகனத்தினையும் அதில் பயணித்தவர்களையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் அழைத்துசென்றுள்ளார்கள்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.