14,600 ஆடுகளை ஏற்றிச் சென்ற பெரிய சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி பயங்கர விபத்து!

image_pdfimage_print

ருமேனியா நாட்டில் 14,600 ஆடுகளை ஏற்றிச் சென்ற பெரிய சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு நகரமான கான்ஸ்டானியாவுக்கு அருகிலுள்ள மிடியா துறைமுகத்தை விட்டு வெளியேறி சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட குயின் ஹிந்த் சரக்கு கப்பல் ஞாயிற்றுக்கிழமை காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடலில் மூழ்கிய ஆடுகளை காப்பாற்ற மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். எனினும், கப்பலில் பயணித்த கப்பல்குழு உறுப்பினர்களான 22 சிரிய நாட்டினரும் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆடுகளை காப்பாற்ற பொலிஸ், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ருமேனிய கடலோர காவல்படை சம்பந்தப்பட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளது. கப்பலின் அருகே நீந்திய 32 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் பல நீரில் மூழ்கிவிட்டதாக நம்பப்படுகிறது.

நாங்கள் ஏற்கனவே சிறிய எண்ணிக்கையிலான ஆடுகளை காப்பாற்றியுள்ளோம், அவை கடலில் நீந்திக் கொண்டிருந்தன என்று கான்ஸ்டானியாவில் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இரவு இடைநிறுத்தப்பட்ட மீட்பு பணி திங்கள்கிழமை காலை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கப்பல் கவிழ்ந்ததற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை. ஆடுகளை காப்பாற்றுவதற்கும் , கப்பலை மீட்பதற்கான நடவடிக்கை முடிந்த பின் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.