காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு சென்ற இளைஞர்: இடுப்பு பகுதியில் எக்ஸ்ரே மூலம் கண்டறிந்தது!

கோவையில் இளைஞர் ஒருவருக்கு ஊசி உடைந்து இடுப்பு எலும்பில் சிக்கி கொண்ட சம்பவம் தொடர்பாக மருத்துவமனை குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை (26). இவர் கடந்த மாதம் 22ஆம் திகதி காய்ச்சல் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு டைபாய்டு இருப்பதாக செவிலியர் ஒருவர் ஊசி போட்டுள்ளார்.

அப்போது ஊசியின் முனைப்பகுதி தம்பிதுரையின் இடுப்பு பகுதியில் உடைந்துவிட்டது என்பதை அவர் கவனித்து செவிலியரிடம் கேட்டுள்ளார். அந்த செவிலியரோ அதை மறுத்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்.

பின் வீடு திரும்பிய தம்பிதுரைக்கு வலி அதிகரிக்கவே அந்த மருத்துவமனையின் மருத்துவர் ஜெயக்குமார் என்பவரிடம் சென்று கேட்டுள்ளார். அவரே வேறு மருத்துவமனையில் சென்று பார்க்கும்படி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தம்பிதுரை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது ஊசி இடுக்கு பகுதியில் 7மில்லி மீற்றர் அளவுக்கு சிக்கி கொண்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தக்கபதில் அளிக்கவில்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். மருத்துவமனை நிர்வாகமோ தம்பிதுரை மிரட்டல் விடுவதாகவும், அந்த ஊசி உடைந்து உள்ளே சென்றது எங்கள் தவறு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தம்பிதுரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.