சங்கடங்களை தைரியமாக எதிர்கொள்ளும் தனுசு ராசிக்காரர்களே! 2020 சனி உங்களுக்கு நன்மை தர போகிறாராம்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம்.

சங்கடங்களை தைரியமாக எதிர்கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே, உங்களது சுய வீட்டில் அமரப்போகும் சனிபகவான் உங்களுக்கு படிப்படியாக நன்மையை தரப்போகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களை படாத பாடு படுத்திய சனிபகவான் இந்த வருடம் உங்கள் ராசியை விட்டு செல்கின்றார். ஏழரை சனியின் கடைசி மூன்று வருடம் மீதம் இருந்தாலும், இதுவரை பட்ட கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும்.

வருமானத்தில் தடை, கெட்ட பெயர், வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்னைகள், இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும்.

குடும்பம் – குடும்பத்தில் வாக்குவாதம் அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து பேசுவது நல்லது. உங்கள் ராசியில் குரு உள்ளதால், உடல் நலக் குறைபாடும் மருத்துவ செலவும் ஏற்படும்.

உங்கள் ராசியில் உள்ள குரு 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால் உங்கள் குழந்தைகளால் சந்தோஷமும், மனநிம்மதியும் பெறுவீர். இனிவரும் நாட்களில் சந்தோஷம் அதிகரிக்கக்கூடும்.

தந்தை வழி உறவுகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஏழரை சனியால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட விரிசல்கள் இனி மறைந்து ஒற்றுமை நிலவும்.

பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. கோவில்களுக்கு சுற்றுலா பயணம் செல்வதாக இருந்தால் குடும்பத்துடன் செல்வது நல்லது.

மாணவர்கள் – உங்கள் ராசியில் இருந்து 5ஆம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால், படிப்பில் ஆர்வம் அதிகரித்து முன்னேற்றம் அடைவீர்கள்.

சோம்பல் தனத்தை விட்டு பெற்றோரின் அறிவுரைப்படி நடந்து கொள்வது முன்னேற்றம் தரும்.

பெரியோர்களிடம் பேசும் போது வார்த்தையில் மரியாதை தேவை. படிப்பை பாதியில் விட்டவர்கள் இந்த வருடம் உங்கள் படிப்பை தொடரலாம்.

திருமணம் – திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நிதானமாக முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. இந்த வருட கடைசியில் உங்களுக்கான திருமணம் நிச்சயிக்கப்படும். அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

கணவனுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

வேலைவாய்ப்பு – வேலைவாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வேலைக்கு செல்வது நல்லது.

உங்கள் தகுதிக்கு குறைவான வேலை என்று, வரும் வேலை வாய்ப்பை நிராகரிக்க வேண்டாம். உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நேரம் கூடிய விரைவில் வரப்போகிறது.

நீங்கள் எதிர்பார்த்த சம்பளமும் பதவி உயர்வும் கூடிய விரைவில் கிடைத்துவிடும்.

சொந்தத் தொழில் – தடைகளை மட்டுமே சந்தித்த உங்களுக்கு இந்த வருடம் தடைகளை தகர்த்து முன்னேறும் காலமாக மாறப்போகிறது.

சனி பகவான் உங்கள் ராசியை விட்டு வெளியே சென்று 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்தைப் பார்க்கப் போவதால், உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

ஆனால் லாபமானது குறைவாகத் தான் கிடைக்கப்பெறும். பலனை எதிர்பார்க்காமல் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள். வருங்காலத்தில் வெற்றி நிச்சயம். முதலீட்டை படிப்படியாக உயர்த்திக் கொள்வது நல்லது.

வேலைக்கு செல்பவர்கள் – வேலைக்குச் செல்லுமிடத்தில் மரியாதை இழந்து, சில பேர் வேலையே இழந்து கூட இருப்பீர்கள். அந்த கஷ்டங்களெல்லாம் இனி தீரும். இழந்த மரியாதைகளும், வேலையும் இனிவரும் காலங்களில் மீட்டெடுப்பீர்கள்.

பரிகாரம் – குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம். செவ்வாய், வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் பச்சரிசி சாதம், எள்ளு, வாழைப்பழம் இவற்றை ஒன்றாக பிசைந்து பசுமாட்டிற்கு கொடுப்பது நல்லது.

உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது நன்மையை தரும்.