பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிரடி அறிவிப்பு..!! பெரு மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்..!

பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் வரி (VAT) 15% இலிருந்து 8% வீதமாக குறைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி அமுலாகும் வகையில் குறித்த வரியை குறைப்பதற்கு நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதி வழங்கியுள்ளது.

தேசத்தை கட்டியெழுப்பும் வரி (NBT), உழைக்கும்போதே செலுத்தும் வரி (Payee Tax), வட்டிக்கான பிடித்து வைத்தல் வரி (With Holding Tax) பற்று வரி (Debit Tax) ஆகியவற்றை உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை தொலைத் தொடர்புகள் வரி 25% ஆக குறைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தேச கட்டிட வரி உட்பட பல வரிகளை நீக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதைப்போல டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் வற் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை நேற்றைய கூட்டத்தின்போது, புதிய வரிகளைச் சீர்திருத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.