இலங்கையில் போரால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் திட்டத்தை புதிய அரசு தொடர வேண்டும்.

அவர்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலைமையை புதிய அரசு ஏற்படுத்த வேண்டும் என இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை இன்று முற்பகல் புதுடில்லியில் சந்தித்தார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட ஐ.நா. தீர்மானம், இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, வடக்கு, கிழக்கில் இந்திய நிதியுதவியில் தமிழ் மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், திருகோணமலை எண்ணெய் கிடங்கு விவகாரம், தமிழர் பகுதிகளை இணைக்கும் ரயில் பாதை திட்டம் போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பான இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை கோட்டாபயவிடம் ஜெய்சங்கர் இதன்போது எடுத்துரைத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமரின் அழைப்பையேற்று முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ பயணமாக கோட்டாபய இந்தியாவுக்கு வருகை தந்துள்ளமை குறித்து வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்துள்ளார்.

அயல் நாடுகளான இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே காணப்படும் நீண்டகால நட்புறவு இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் ஊடாக மேலும் பலப்படும் என்று தான் நம்புவதாக குறிப்பிட்ட இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கையில் புதிய அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும்.
பொருளாதார அபிவிருத்திகளை நோக்காகக் கொண்ட பரஸ்பர நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய அணுகுமுறையினூடாக இந்திய – இலங்கை தொடர்பை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்பார்ப்பாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், தரமான வர்த்தக கட்டுப்பாட்டு முறைமையொன்று காணப்பட வேண்டியது அதற்கான அடிப்படை தேவையாகும் எனவும், இதனூடாக வெளிநாட்டு முதலீடுகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியால் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை மேலும் பலப்படுத்தத் தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜெயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒஸ்டின் பெர்னாண்டோ, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து மற்றும் இந்து சமுத்திர வலய ஒன்றிணைந்த செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
Joint press meet with President @GotabayaR. Watch. https://t.co/eI65NrakDM
— Narendra Modi (@narendramodi) November 29, 2019
இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தெவோல் நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
