டிசம்பர் மாத ராசிபலன்… திடீர் அதிர்ஷ்டத்தால் குதூகலிக்கப் போகும் ராசி இதுதான்!

2019ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. நவ கிரகங்களில் 6 கிரகங்கள் மொத்தமாக தனுசு ராசியில் கூடப்போகின்றன. சந்திரன் தவிர ஐந்து முக்கிய கிரகங்கள் தனுசுவில் கூடியிருக்கும். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் டிசம்பர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம். இந்த ராசி பலன்கள் பொதுவானவைதான் உங்களின் சுய ஜாதகத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதைப் பொருத்தும் தசா புத்தியை பொருத்தும் உங்களுக்கு பலன்கள் மாற வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் மாதத்தில் தனுசு ராசியில் முக்கிய கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. மிதுனத்தில் ராகு, துலாம் ராசியில் செவ்வாய், புதன், விருச்சிகத்தில் சூரியன், தனுசு ராசியில் குரு, சனி, கேது, சுக்கிரன், மகரம் ராசியில் சந்திரன் என இந்த மாதம் பிறக்கிறது. டிசம்பர் 5ஆம் தேதி புதன் விருச்சிகத்திற்கு மாறுகிறார். டிசம்பர் 25ஆம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார். டிசம்பர் 15ஆம் தேதி சுக்கிரன் தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கு மாறுகிறார். 17ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு மாறுகிறார். டிசம்பர் 25ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களையும் தரும்.

நவ கிரகங்கள் எல்லோருக்குமே நன்மையோ, தீமையோ செய்வதில்லை. கிரகங்களின் கூட்டணியால் டிசம்பர் மாதத்தில் 12 ராசிகளும் எவ்வாறான அதிர்ஷ்டத்தினைப் பெறப்போகின்றது என்பதைக் காணலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் கிரகங்கள் இணைகின்றன. முதல் 25 நாட்கள் உங்க ராசி நாதன் செவ்வாய் பார்வை ராசியிலும் இரண்டாம் வீட்டிலும் பதிகிறது தெளிவாக திட்டமிடுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். புதன் எட்டாம் வீட்டிற்கு செல்வதால் இடையூறுகள் விலகும். 15ஆம் தேதி சுக்கிரன் மகரம் ராசிக்கு மாறுகிறார். பணம் தேடி வரும் ரியல் எஸ்டேட் லாபம் தரும். 25 ஆம் தேதி செவ்வாய் எட்டாம் வீட்டிற்கு வருகிறார். செவ்வாய் ஆட்சி பெற்று அமர்கிறார். இரண்டாம் மற்றும் மூன்றாம் வீட்டில் செவ்வாய் பார்வை படுகிறது. அடுத்த வருஷம் என்ன பண்ணலாம் என்று திட்டம் போடுங்க நல்லதா நடக்கும். வண்டி வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.

மாத இறுதியில் ஆறு கிரகங்கள் ஒன்பதாம் வீட்டில் இணைகின்றன. இந்த கிரக சேர்க்கை எப்படி இருக்கும் என்றால் அது நன்மையை தரும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தை நல்லதாக நடக்கும். கடன் அடைக்க வருமானம் வரலாம். கல்வியில் உயர்கல்வி யோகம் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் நோய்கள் தீரும். சாதகமான பலன்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். எதிர்பாராத நன்மைகளை கொடுக்கும். செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

ரிஷபம்
அஷ்டமத்து சனி எட்டாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. அந்த மூன்று நாட்களில் கவனமாக இருங்க. பண விசயத்தில் எச்சரிக்கையாக இருங்க. யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்க. ஆறாம் வீட்டில் செவ்வாய், டிசம்பர் 25ஆம் தேதி விருச்சிகத்திற்கு ஏழாம் வீட்டிற்கு நகர்கிறார். சூரியன் ஏழாம் வீட்டில் 16ஆம் தேதி வரை இருக்கிறார். புதன் டிசம்பர் 5ஆம் விருச்சிகத்திற்கு வருகிறார். உங்க ராசியின் மீது பார்வை படுகிறது. புதன் பார்வையால் பணவரவு அதிகமாகும். திருமண விசயங்களில் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.

சூரியன் 16ஆம் தேதி நகர்ந்து எட்டாம் வீட்டில் சனி, கேது குரு , புதன், உடன் இணைகிறார். சந்திரன் 25ஆம் தேதி எட்டாம் வீட்டிற்கு நகர்கிறார். சூரியன் பெயர்ச்சி உங்களுக்கு உடல் நலத்தை பாதிக்கும். எச்சரிக்கையாக இருங்க. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் எட்டிப்பார்க்கும். மழை கால நோய்கள் உண்டாகலாம். உங்க ராசிநாதன் சுக்கிரன் டிசம்பர் 15ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். பாதிப்புகளில் இருந்து உங்களை காப்பாற்றுவார். டிசம்பர் 25ஆம் தேதி ஆறு கிரகங்கள் இணைகின்றன. காதல் விவகாரங்களில் கவனம். பயணங்களில் கவனமாக இருங்க. தேவையில்லாத வார்த்தைகளை பேச வேண்டாம், பணம் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் வழிபட பாதிப்புகள் குறையும்.

மிதுனம்
உங்க ராசிநாதன் 5 ஆம் தேதி ஆறாம் வீட்டிற்கும் 25ஆம் தேதி 7ஆம் வீட்டிற்கு நகர்கிறார். ஆறாம் வீட்டில் உள்ள சூரியன் 16ஆம் தேதிக்கு மேல் ஏழாம் வீட்டிற்கு நகர்கிறார். ஆறு கிரக கூட்டணி ஏழாம் வீட்டில் இருக்கின்றன. பத்தாம் இடத்திற்கு பத்தாம் இடம் ஏழாம் வீடு. தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். நிதானமாக இருங்க. திடீர் முடிவுகள் ஏற்படும். ஆபத்து எதுவும் இல்லை என்றாலும் அவசரப்பட வேண்டாம். டிசம்பர் 25 முதல் 27 இரவு வரை ஆறு கிரகங்கள் உங்க ராசியை பார்க்கிறார்கள். குரு பார்வை இருப்பதால் நல்லதே நடக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்க. திருமணம் தொடர்பான முடிவுகள் எடுப்பதை ஒத்திப்போடுங்க. பயணங்களை ஒத்திப்போடுங்க. இந்த கிரகங்கள் விலகிய பின்னர் முடிவுகளை எடுங்க. இடமாற்றம், வேலை மாற்றம் பற்றி கொஞ்சம் யோசிங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இந்த மாதம் நீங்க பெருமாள் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

கடகம்
கடகம் ராசிக்கு அதிபதி சந்திரன். ராசிக்கு தன ஸ்தானதிபதியான சூரியன், இந்த மாதம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான விருச்சிகத்தில் பயணிக்கிறார். ஆறாம் வீடான தனுசு ராசியில் உள்ள சுக்கிரன் மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு செல்கிறார். இந்த மாதம் பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும் இருந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்பட்டு மாத பிற்பகுதியில் கடன் வாங்குவீர்கள். சிலர் நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவீர்கள். சுப கடன்கள் வாங்குவீங்க. வீட்டு கடன்கள் வாங்குவீங்க.

நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு உயர்வான காலகட்டம். சூரியன் ஆறாம் வீட்டிற்கு நகரும் போது அரசு அதிகாரிகள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லஞ்சம் வாங்காதீங்க, கண்டிப்பாக மாட்டிப்பீங்க. கார்ப்பரேட் நிறுவன உயரதிகாரிகள் கவனம். இந்த மாதம் சுப செலவுகள் நிறைய வரும். பெண்கள், இளைஞர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். செவ்வாய் இந்த மாதம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார் அவர் மாத இறுதியில் ஐந்தாம் வீட்டிற்கு நகரும் போது இடமாற்றம் வேலை மாற்றம் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போகவும். மாணவர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம். டிசம்பர் 25,26,27 ஆம் தேதி ஆறு கிரகங்கள் இணைகின்றன, அது ஆறாம் வீடு பெரிய முடிவுகள் எதுவும் எடுக்காதீங்க. கல்வி, வேலை தொடர்பான முடிவுகள் எதுவும் 25ஆம் தேதிக்கு மேல எடுக்காதீங்க. டிசம்பர் 15 சுக்கிரன் இடம் மாறுகிறார். சுப செலவுகள் ஏற்படும், புதன் டிசம்பர் 5ஆம் தேதி இடம் மாறுவதால் மாணவர்களுக்கு நன்மை நடக்கும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனம், பழனி முருகனை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சிம்மம்
சூரியன் நான்காம் வீட்டில் இருக்கிறார் 17 ஆம் தேதி ஐந்தாம் வீட்டிற்கு போகிறார். பஞ்சம ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் கூடுகின்றன. நன்மைகள் நடக்கும் பிள்ளைகளுக்கு யோகமான காலம். ராகு பகவான் லாபத்தில் இருந்து குரு பார்வை பெறுவதால் பண வரவு அதிகமாகும். உங்க தகவல் தொடர்பு அற்புதமாக இருக்கும். காரணம் இரண்டாம் அதிபதி புதன் மூன்றாம் வீட்டில் இணைந்திருக்கிறார். மாணவர்களுக்கு அதிர்ஷ்டமான மாதம். கல்வியில் முன்னேற்றம் வரும். வியாபாரிகள், தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம், முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். கவுரவ பதவிகள் தேடி வரும். பெண்களுக்கு முன்னேற்றமான காலகட்டம் நல்லதாக நடக்கும்.

செவ்வாய் முன்றாம் வீட்டில் இருப்பதால் சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீடு சொத்து வாகனம் வாங்கும் யோகம் வரும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும். சிம்மத்தில் பிறந்தவர்கள் மாத பிற்பகுதியில் சுக்கிரன் சஞ்சாரம் சரியில்லை. வேலையில் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருங்க, தொழில் கிரகம் ஆறாம் வீட்டிற்கு நகரும் காலத்தில் விபரீதமான முடிவுகளை தருகின்றன. வேலை மாறுவதற்கு இது சரியான காலகட்டமல்ல. தொழில் தொடங்குவதற்கும் இது சரியான நேரமல்ல. உடம்புல சின்னச் சின்ன உபாதைகள் வரலாம். ஆன்மீகவாதிகளுக்கு அற்புதமான காலம், கண்ணியமாக இல்லாட்டி பிரச்சினையாகிவிடும். இளைஞர்களுக்கு காதல் வர வாய்ப்பு உள்ளது. இளம் பெண்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் கவனமாக இருங்க இல்லாட்டி சிக்கல்ல மாட்டிப்பீங்க.

மாத இறுதியில் ஐந்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. மன குழப்பம் வரும், வேலை மாற நினைப்பீர்கள், புதிய தொழில் தொடங்கலாமா என்று தோன்றும், பிள்ளைகள் வழியே தொல்லைகள் ஏற்படும். மன உளைச்சல் ஏற்படும் என்றாலும் செவ்வாய் உங்களை காப்பாற்றுவார். மாத இறுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தேவையில்லை, வேலையில் விழிப்புணர்வோடு இருங்க. வீட்ல வீண் விவாதங்கள் வேண்டாம் தவிர்த்து விடுங்க. அமைதியாக இருங்க பிரச்சினைகள் சரியாகும். கால பைரவரை வழிபடுங்க ரொம்ப நல்லது.

கன்னி
புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரங்களே, பத்தில் ராகு சஞ்சரிக்கிறார். பத்தில் ஒரு பாவி இருப்பது நல்லது நல்ல வேலை கிடைக்கும். ராசி நாதன் புதன் பண வரவை தருவார், தகவல் தொடர்பில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் புதிய வேலை கிடைக்கும். புரோக்கரேஜ் தொழில் செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம், பங்குச்சந்தை தொழில் செய்பவர்களுக்கு லாபம் வரும். உங்க ராசி அதிபதியும் பத்துக்கு உடைய புதன் உங்க ராசிக்கு நல்லதே செய்வார். இந்த மாதம் நன்மை தீமை கலந்த மாதம்தான்.

மாணவர்களுக்கு நன்மையான மாதம், கேம்பஸ் இண்டர்வியூல வேலை கிடைக்கும். கல்லூரி படிப்பு படிக்கும் மாணவர்கள் கவனமாக இருக்கணும். உங்களின் செல்வ நிலை உயரும். மகள், மனைவிக்கு தேவையான பொன்நகைகளை வாங்கி கொடுப்பீர்கள். கோரிக்கைகள் நிறைவேறும். இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் கவனம் வீட்டில் கோபமாக பேச வேண்டாம் வீண் வம்பு வாக்கு வாதங்களை தவிர்த்து விடுங்கள்.

உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. பயணங்களில் நிதானமாக இருங்க. மாத இறுதியில் 6 கிரகங்கள் சேருவதால் அம்மாவின் உடல் நலத்தில அக்கறை காட்டுங்க. சொத்துக்கள் வாங்குவது, வெளியூர், வெளிநாடு பயணம் செல்வதை அந்த 3 நாட்கள் தவிர்த்து விடுங்க. ஆண்டின் இறுதியில் இருந்தாலும் இந்த மாதம் உங்களுக்கு சுமாரான மாதம்தான். செவ்வாய் வேறு இரண்டாம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில வாக்குவாதம் வேண்டாம். வீட்ல என்ன சொன்னாலும் அமைதியாக இருங்க. கூடுமானவரை மவுன விரதம் இருப்பது ரொம்ப நல்லது. காஞ்சி காமாட்சி அம்மனை வழிபட நன்மைகள் நடைபெறும்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரங்களே, மூன்றாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. டிசம்பர் 5ஆம் தேதி புதன் குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு நகர்கிறார். வாக்கு திறமை பளிச்சிடும். மாணவர்களுக்கு அற்புதமான மாதம் தேர்வு நல்லா எழுதுவீங்க. வேலை தேடுபவர்களுக்கு திறமை அதிகமாகும் நல்ல வேலை கிடைக்கும். நிறைய வருமானம் வரும். சுக்கிரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார்.

பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பொன் நகைகள் சேர்க்கை அதிகமாகும். மாத பிற்பகுதியில் உங்க ராசி நாதன் சுக்கிரன் நான்காம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு பத்தாம் வீட்டை பார்ப்பார். வண்டி வாகன சேர்க்கை அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி பண்ணுங்க. வருமானம் அதிகம் தரக்கூடிய வேலை கிடைக்கும். ஆண்கள் விலை உயர்ந்த பைக் வாங்குவீர்கள்.

திருமணமான தம்பதியருக்கு இருந்த குறைபாடுகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்க கடவுள் அனுக்கிரகம் வரும். வயிறு தொடர்பான நோய்கள் வரலாம். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டின் மீது விழுவது அப்பாவிற்கு நல்லது செவ்வாய் சஞ்சாரம் உங்க ராசியில் இருந்து களத்திர ஸ்தானத்தை பார்ப்பது கணவன் மனைவி உறவு அற்புமாக இருக்கும். 25ஆம் தேதிக்கு மேல் செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருப்பதால் பேச்சில் கவனமாக இருங்க கோபமாக பேசாதீங்க. குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீரும்.

விருச்சிகம்
சூரியன் உங்க ராசியில் 15 நாட்கள் இருக்கிறார். 17ஆம் தேதிக்கு மேல் இரண்டாம் வீட்டிற்கு மாறுகிறார். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் சனி இரண்டாம் வீட்டில் இருக்கிறார். வெளிநாட்டில் இருப்பவங்கள் விசா விசயத்தில் கவனமாக இருங்க உங்க உடல் நலத்தில அக்கறை காட்டுங்க. உடல் நல தொந்தரவு ஏற்படும். விருச்சிகம் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். சின்னச் சின்ன விரைய செலவுகள் வரும். அலைச்சல் ஏற்படும். குரு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். குரு பலம் வந்திருக்கு, வெளிநாடு யோகம், வேலை பணவரவை தருகிறார்.

பெண்களுக்கு நல்ல மாதம். இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் பொன் நகை சேரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மாத இறுதியில் ஆறு கிரக சேர்க்கை ஏற்படும். இது உங்களுக்கு சின்ன குழப்பத்தை தரும். ரொம்ப கவனமாக இருங்க. சுக்கிரன் இரண்டாம் வீட்ல இருக்கிறார். அவர் 15ஆம் தேதிக்கு மேல் மூன்றாம் வீட்டிற்கு போகிறார். கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. சீனியர் சிட்டிசன்ஸ் கவனமாக இருங்க.

இந்த மாதத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெரிய அளவில் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். பணம் விசயம் மட்டுமல்ல எந்த தொழில் முதலீடுகளையும் டிசம்பர் மாதத்தில் செய்ய வேண்டாம். 25ஆம் தேதிக்கு மேல உங்க ராசி நாதன் உங்க ராசியில வந்து ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்க தைரியத்தை அதிகரிக்கும். 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் நிதானமாக இருங்க வண்டி வாகனத்தில போகும் போது கவனமாக இருங்க. எலும்பு தொடர்பான நோய்கள் வரும். எருக்கம் இலையை தலையில் வைத்து குளித்து சூரியனை வழிபடுங்க.

தனுசு
ஏழரை சனியின் பிடியில் அதுவும் ஜென்ம சனியில் பிடியில் சிக்கியிருக்கும் தனுசு ராசிக்காரர்களே. இந்த டிசம்பர் மாதம் உங்க ராசியில முக்கிய கிரகங்கள் ஒன்று சேருகின்றன. உங்க ராசியில் சனி, கேது, குரு, சுக்கிரன் என நான்கு கிரகங்கள் இருக்கின்றனர். விரைய ஸ்தானத்தில் உள்ள சூரியன் 17ஆம் தேதிக்கு மேல் உங்க ராசிக்கு மாறுகிறார். புதன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வந்து பின்னர் உங்க ராசிக்கு வருகிறார். திடீர் இடமாற்றங்கள் வரலாம். 15ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கு போகிறார். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீங்க. பெண்களுக்கு நல்ல தன லாபம் வந்து சேரும்.

செவ்வாய் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் இந்த மாதம் 25ஆம் தேதி வரை சஞ்சரிக்கின்றனர். மாத இறுதியில் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். மாணவர்களுக்கு புதன் சஞ்சாரம் நல்ல முன்னேற்றத்தை தருவார். மாத இறுதியில் ஆறு கிரகங்கள் உங்க ராசியில இணைகின்றனர். பெரிய பிரச்சினை எதுவும் வராது ஆனால் குழப்பங்கள் வரலாம். கிரகங்கள் கூட்டணியால் தெளிவில்லாத மனநிலையில் இருப்பீங்க. இல்லத்தரசிகள் வெளியாட்களை ரொம்ப நம்பாதீங்க. ஆன்மீகவாதிகள் கவனமாக இருங்க.

உங்க ராசியில் இணையும் ஆறு கிரகங்களும் சரியாக உங்க களத்திர ஸ்தானத்தை பார்க்கின்றன. எந்த முடிவுகளையும் நிதானமாக இருங்க. 12க்கு உடையவன் 12ல் அமர்ந்து சில தடைகளை தருவார். மொத்தத்தில இந்த மாதம் டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை அமைதியாக இருப்பது ரொம்ப நல்லது. சாதாரணமாக பேசுறது கூட உங்களுக்கு சங்கடத்தை தரும். லீவு நாள்ல சுற்றுலா போறேன்னு கிளம்பிடாதீங்க. அமைதியா வீட்ல தூங்கி ரெஸ்ட் எடுக்கிறது நல்லது. ஜனவரி மாதத்தில் இந்த கூட்டணி பிரிந்த பின்னர்தான் நிம்மதி வரும்.

மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு இது மிகச்சிறந்த யோகமான மாதம், நிறைய நன்மைகள் நடைபெறப் போகிறது. ராகு நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தருவார். உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மாத துவக்கத்தில் விரைய ஸ்தானத்தில் சனி, கேது, சுக்கிரன், குரு லாப ஸ்தானத்தில் சூரியன், தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ஆறாம் வீட்டில் ராகு என அமைந்துள்ளது. மகரம் ராசிக்கு 15ஆம் தேதி சுக்கிரன் வருவார். மகரம் ராசிக்கு பத்துக்கு உரிய சுக்கிரன் உங்க ராசிக்கு வருவது சிறப்பு. பெண்களுக்கு நல்ல மாதம், வேலையிலும், குடும்பத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

சனி 12ஆம் வீட்டு அதிபதி குருவோடு சேர்ந்திருக்கிறார். 12ஆம் வீடு வலுத்திருக்கிறது. இடமாற்றம் ஏற்படும். வேலையிலும், இருக்கக்கூடிய வீடுகளிலும் இடமாற்றம் நன்மையை தரும். சிலர் வெளிநாடுகளில் இருந்து சொந்த நாட்டிற்கு வருவார்கள். 16ஆம் தேதி சூரியன் உங்க விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். ஆறாம் அதிபதி, எட்டாம் அதிபதி 12ஆம் அதிபதிகள் 12ஆம் வீட்டில் அமர்ந்துள்ளனர். விபரீத ராஜயோகமாகும். மாத இறுதியில் உங்க விரைய ஸ்தானத்தில் சனி, குரு, சூரியன், சந்திரன்,புதன்,கேது ஆறு கிரகங்கள் இணைகின்றனர்.

என்னதான் நல்ல மாதமாக இருந்தாலும் ஆறு கிரக சேர்க்கையால் மாத இறுதியில் மகரத்திற்கு மன உளைச்சலை கொடுக்கும். திடீர் பிரயாணத்தை கொடுக்கும் முடிந்த அளவிற்கு தவிர்த்து விடுங்க. எதிர்பாராத செலவுகள் வரலாம். பெற்றோர்கள் உடல் நலத்தில கவனமாக இருங்க. செலவுகளை சுருக்கிக்கங்க. வண்டி வாகன வசதிகள் ஏற்படும். விழிப்புணர்வோட இருங்க வண்டி வாகனத்தில் போறப்ப நிதானமும் கவனமும் தேவை. பெண்கள் உடல் நலத்தில கவனமாக இருங்க. தனியாக எங்கேயும் நேரங்கெட்ட நேரத்தில போகாதீங்க. பாதுகாப்பா இருங்க. மகரம் டிசம்பர் மாதம் விழிப்புணர்வோட இருந்தா பிரச்சினைகளை எளிதாக கையாளலாம். பைரவர் வழிபாடு அவசியம் செய்யவும். நிறைய தான தர்மங்கள் செய்யலாம்.

கும்பம்

இந்த மாதம் கும்பத்தில் லாப ஸ்தானத்தில் கிரகங்கள் கூட்டணி அமைந்துள்ளது. லாப ஸ்தானம் அற்புதமாக இருக்கிறது. பத்தாம் வீட்டில் சூரியன், ஒன்பதாம் வீட்டில் புதன் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. புதன் பெயர்ச்சியாகி தொழில் ஸ்தானத்திற்கு வருவார். புதன் நன்மை செய்வார். உங்க தொழிலில் லாபத்தை தருவார். பெண்களுக்கு அற்புதமான கால கட்டம். லாபத்தில் உள்ள சுக்கிரன் பல நன்மைகளை கொடுப்பார். செவ்வாய் 25ஆம் தேதி தொழில் ஸ்தானத்திற்கு வருவது சிறப்பு. சொத்துக்கள் வாங்கலாம். சுக்கிரன் 15ஆம் தேதி உங்க ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு மாறுகிறார். வெளிநாடு யோகம் தேடி வரப்போகிறது. சுக்கிரன் மறையும் போது உடல் நலத்தில கவனமாக இருங்க. பெற்றோர்கள் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்க. மருத்துவ பரிசோதனை தேவை.

குரு பகவான் லாபத்தில் இருக்கிறார் நல்ல தன செழிப்பு ஏற்படும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குங்க. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. டிசம்பர் மாதத்தில் ஆறு கிரக சேர்க்கை அற்புதமான பலன்களை கொடுப்பார். மாணவர்களுக்கு அற்புதமான மாதம், குடும்பத்திலும் குதூகலமாக இருக்கும். நல்ல ஆதாயம் கொடுக்கக்கூடிய மாதம் இந்த டிசம்பர் மாதம் என்பது சிறப்பு. எதையும் தள்ளி வைக்காதீங்க முடிக்க வேண்டிய நல்ல காரியங்களை முடிச்சிருங்க. துர்க்கையம்மனை விளக்கேற்றி வழிபடுங்க நல்லதே நடக்கும்.

மீனம்
இந்த மாதம் மீனம் ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி,குரு, கேது, சுக்கிரன் சஞ்சாரம் உள்ளது எட்டாம் வீட்டில் செவ்வாய், புதன், ஒன்பதாம் வீட்டில் சூரியன், நான்காம் வீட்டில் ராகு சஞ்சரிக்கின்றனர். செவ்வாய் எட்டில் இருந்தாலும் உங்க தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவு நன்றாகவே இருக்கும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க, நெருப்பு, கூர்மையான ஆயுதங்களை கையாளும் போது கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருங்க.

புதன் ஒன்பதாம் வீட்டிற்கு விரைவில் வருகிறார். தொழில் லாபத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு படிப்பு, உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. தேர்வு பயம் நீங்கிவிடும்.

பத்தாம் வீட்டில் ஆறு கிரக சேர்க்கை பதவி உயர்வை கொடுக்கும். நினைத்தது நிறைவேறும். யோகமான காலகட்டம், வீடு, நிலம் வாங்கலாம். புதிய வேலை மாறலாம். சுக்கிரன் பத்தாம் வீட்டில் இருந்தாலும் 15ஆம் தேதிக்கு மேல் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருகிறார். உங்களுக்கு நல்லதே செய்வார். திருமண யோகம் கை கூடி வருகிறது. சுக்கிரன் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும் பயணங்களில் சுபம் ஏற்படும். செவ்வாய் ஒன்பதாம் வீட்டிற்கு மாத இறுதியில் வந்து தனது ராசியில் ஆட்சி பெற்று அமரும் போது இன்னும் நல்ல பலன்களை கொடுக்கும். இது மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கை கொடுக்கும். சந்தோஷமாக டிசம்பர் மாதத்தை கொண்டாடுங்கள்.