தஞ்சை பெரியகோவிலில் 23 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்!

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் கம்பீரமாய் உறுதியுடன் நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2020ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பாலாலய பூஜை டிசம்பர் 2ஆம் தேதியான நேற்று நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழர்களின் கட்டடக்கலை திறமைக்கு சான்றாக இருப்பது தஞ்சை பெருவுடையார் என்றழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில். யுனெஸ்கோ பாரம்பரிய கலைச்சின்னங்களின் பாதுகாப்பு பட்டியலிலும் இக்கோவில் இடம்பெற்றுள்ளது. அதோடு மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும்.

கி.பி 1006ஆம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, 1000 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, இன்றைக்கும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கம்பீரமாக நிற்கிறது தஞ்சை பெருவுடையார் கோவில். உலகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தினமும் வந்த இந்த கோவிலை பார்த்து பிரமித்த வண்ணம் உள்ளனர்.

இவ்வளவு புகழ்வாய்ந்த, தமிழகத்திற்கும் தமிழர்களின் கட்டடக்கலைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இக்கோவிலானது தமிழக ஆட்சியாளர்களுக்கு மட்டும் என்றைக்குமே பிடித்தமான கோவிலாக இருப்பதில்லை. அதனால் தானோ என்னவோ, இக்கோவிலையும் முறையாக பராமரிப்பு செய்யாமல் பாராமுகமாகவே வைத்துள்ளனர். பொதுவாக, கோவில்கள் என்பவை நிர்மாணிக்கப்பட்டு குடமுழுக்கு செய்ததில் இருந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது இந்து சமய ஆகமவிதியாகும்.

அப்போது தான் அந்த கோவிலில் தெய்வீக சக்தியானது நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே, பெரும்பாலான இந்து சமய கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். 1997ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, யாகசாலை பூஜையின்போது பந்தலில் பற்றிய தீ கோயில் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 48 பேர் உயிரிழந்ததும், பலரும் படுகாயம் அடைந்தனர்.

இதன்பின்னர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த யாரும் ஆர்வம் காட்டவில்லை. அதிமுக, திமுக என மாறி மாறி ஆண்டும் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்துவதென்று பிரகதீஸ்வரர் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை ஆகியவை சேர்ந்து முடிவெடுத்தன.

இதற்கான ஆரம்ப கட்டப்பணிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோயில் வளாகத்தில் பாலாலய யாகசாலைக்கு பந்தல் அமைக்கும் பணியைத் தொடங்குவதற்காகப் பந்தகால் ஊன்றும் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேக திருப்பணிகளை, கோவில் நிர்வாகத்தோடு சேர்ந்து பக்தர்களும் செய்து வருகின்றனர்.

அதன்படி, டிசம்பர் 2ஆம் தேதியான நேற்று பிரகதீஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. இதன் முதல் கட்டமாக யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று தொடங்கியது. முதல் கால யாகசாலை பூஜை, 2ஆம் கால யாகசாலை பூஜை, 3ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றன. நேற்று அதிகாலை 5 மணியளவில் 4ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு, காலை 7.10 மணியளவில் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று காலை 9.30 மணிக்கு பாலாலய மூர்த்திகளுக்கு புனித நீரால் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பாலாலயம் நடைபெற்றதை அடுத்து பிரகதீஸ்வரர் கோவிலின் அனைத்து மூலவர் சன்னதிகளும் அடைக்கப்பட்டன. வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்பே அனைத்து மூலவர் சன்னதிகளும் மீண்டும் திறக்கப்படும்.

முன்னதாக, மூலவ மூர்த்திகளின் தெய்வ சக்தியை கலசங்களில் கலாகர்ஷணம் செய்து யாகசாலைக்கு எடுத்துச் சென்ற பின்பு, பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன், நடராஜர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் நடை அடைக்கப்பட்டன. அதேபோல், பெரிய நந்தி மற்றும் சிறிய நந்தி மற்றும் அனைத்து மூலவர் சிலைகளும் வெள்ளை நிற துணியால் மூடப்பட்டிருந்தன.

பாலாலய பூஜை முடிந்த பின்னர், மூலவர்களின் தெய்வீக சக்தியானது வேதாகம முறைப்படி, பாலாலய திருமேனிகளில் சேர்க்கப்பட்டு, அவைகள் பிரகதீஸ்வரர் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக எழுந்தருள செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து செப்புத் திருமேனியால் ஆன பெருவுடையார், பெரியநாயகி அம்மன் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

மற்ற மூலவர்களுக்கு பதிலாக ஆவாஹணம் செய்யப்பட்ட படங்களுக்கு பூஜைகள் நடைபெற்றன. பாலாலய பூஜையில், தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த பின்பே, அனைத்து மூலவர்களையும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.