வடக்கில் 20,011 பேரும் கிழக்கில் 18,001 பேருமாக இன்று மாற்றுத்திறனாளிகள் தினம்!

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் 20,011 மாற்றுத்திறனாளிகளும் கிழக்கு மாகாணத்தில் 18,001 மாற்றுத்திறனாளிகளும் இன்று உலக மாற்றுத்திறனாளிகளோடு இணைந்து மாற்றுத்திறனாளிகள் நாளை அனுஷ்டிக்கின்றார்கள்.

போர் நடந்த காலத்திலும், போரின் பின்னரான காலத்திலும், மாற்றுத்திறனாளிகளோடு எமது சமூகம் பயணிக்கின்றதை இன்று நாம் நன்றியோடு நினைவு கூறுகின்றோம். எம்மோடு இங்கே பயணிக்கும் அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் மற்றும் புலம்பெயர்ந்து கடல் கடந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் துரத்தில் இருந்தாலும் எம் மீது அன்பு கொண்டு எம்மை அரவணைக்கும் எமது புலம்பெயர் உறவுகளுக்கும் எமது நன்றிகளை இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றோம்.

ஒரு மாற்றுத்திறனாளி என்ற நிலையில் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் அன்றாட வேலைகளைச் செய்வதற்கான பெரும் சவால்கள் இன்னமும் பெரும்பாலும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதேவேளை மூப்பும், நோயும் வருகின்ற போதும் வடக்கிலும் கிழக்கிலுமாக இருக்கின்ற 38,012 மாற்றுத்திறனாளிகளின் எதிர்கால வாழ்வு குறித்து நாங்கள் இப்போது சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

மாற்றுத்திறனாளிகள் குறித்தான ஒரு கொள்கையை உருவாக்குவதற்காக நாங்கள் முனைப்புடன் பாடுபட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளையும், பாதிக்கப்பட்டோரையும் இணைத்து நடாத்தப்பட்ட சுயமதிப்பீட்டு மாநாட்டின் அடிப்படையில் பாதிக்கப்பட்டோர் வேண்டி நிற்கும் விடயங்களை நடைமுறைப்படுத்தவல்ல சக்தி படைத்தவர்கள், அதிகாரத்திலுள்ளவர்களை சேர்த்து செயற்படுத்துவதற்கு DATA முயற்சித்து வருகிறது. நாம் ஒவ்வொரு சந்திப்பிலும் கேட்கும் விடயங்கள் பின்வருமாறு அமைகின்றன.

மாற்றுத்திறனாளிகள் குறித்தான கொள்கை

மற்றவர்களில் தங்கி வாழ்தலில் இருந்து விடுபடக்கூடிய அம்சங்களை உள்ளடக்கி மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு

நடைமுறையிலுள்ள மாதாந்த கொடுப்பனவிற்கு மேலதிகமாக மிகவும் பாதிப்பு நிலைக்குள்ளாகியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் 10,000 ரூபாவிற்கு குறையாது கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும். உதாரணமாக முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், இரண்டு கைகளையும் இழந்தோர், இரண்டு கண்களையும் இழந்தோருக்கான மாதாந்த கொடுப்பனவுகள் 10,000 ரூபாவிற்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்.

அணுகும் வசதி

பொது இடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகும் வசதிகள் இருப்பதோடு மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்து ஏற்படுத்தப்பட வேண்டும்.

பராமரிப்பு இல்லங்கள்

அனைத்து வசதிகளுடன் கூடிய பராமரிப்பு இல்லங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்படுதல் வேண்டும்.

ஆதரவற்ற சிறுவர்கள்

ஆதரவற்ற சிறுவர்களுக்கு அவர்களது சிறுவர் பராயத்தில் அரச கொடுப்பனவுகள் உறுதிப்படுத்தப்படுவதோடு அவர்கள் வளர்ந்து வரும் நிலையில் அவர்களின் வாழ்க்கையை நிலைபெறச் செய்வதற்கான கொடுப்பனவுகளையும், வழிகாட்டுதல்களையும், உருவாக்குதல் வேண்டும்.

தொழில் முயற்சி

மாற்றுத்திறனாளிகளாலும், பெண் தலைமைத்துவ குடும்பத்தினராலும் மேற்கொள்ளப்படுகின்ற வாழ்வாதார முயற்சிகளுக்கான நிதி வளங்களை ஏற்படுத்த வேண்டும்.

தொழில் வாய்ப்பு

அரச வேலைவாய்ப்புக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு மூன்று வீதத்திலிருந்து ஆறு வீதமாக உயர்த்தப்படுதலை உறுதிப்படுத்த வேண்டும்.

சட்ட அமுலாக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் முழுமையான அளவில் அமுலாக்கப்பட வேண்டும்.

கல்வி

பாதிக்கப்பட்டோருக்கான விசேட கல்வி முறைகள் முழுமையான விதத்தில் அமுலாக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வழிமுறைகளை செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு

வடக்கு கிழக்கில் உள்ள மாற்றுத்திறனாளி வீரர்கள் சர்வதேச அளவில் விளையாட்டுக்களில் பங்குபற்றுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும்.

முதியோர் கொடுப்பனவுகள்

போரின் போது தமது பிள்ளைகளை இழந்த முதியவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணம் எங்கிலும் நகரப்பகுதிகளை மையமாகக் கொண்டும், தொலைத்தொடர்பு வசதிகளை பெற்றுக் கொள்ளமுடியாத கிராமங்களை மையமாகக் கொண்டும் மாற்றுத்திறனாளி அமைப்புக்கள் இயங்குகின்றன. அவற்றில் எமது விளையாட்டுப் போட்டிகளிலும் எமது சுய மதிப்பீட்டு மாநாட்டிலும் பங்கு கொண்ட அமைப்புகளை அவைகளின் தலைமையகம் அமைந்துள்ள இடத்தை மையமாக வைத்து இங்கே நாங்கள் பட்டியலிடுகின்றோம்.

எமது உறவுகளிடம் நாங்கள் வேண்டிக் கொள்வது இந்தப் பட்டியலில் இருக்கின்ற அனைத்து அமைப்புகளுக்கும் ஏதோ ஒரு வகையில் உங்களின் உதவிக்கரம் நீட்ட வேண்டும். குறிப்பாக தொலைத்தொடர்பு வசதிகள் எதுவுமற்ற நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்ற அமைப்புகளுக்கும் உங்கள் அன்பு நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் அவர்களை நீங்கள் நாடிச் செல்ல வேண்டும். உங்களை நாடி வரும் அளவிற்கு அவர்களிடம் வசதிகள் எதுவுமற்றநிலையில் தான் இயங்கி வருகிறார்கள் என்பதை இந்த மாற்றுத் திறனாளிகள் தினத்தில் கூறிக்கொள்கிறோம். அவர்களுக்கு உங்கள் அன்பு சென்றடைந்து, அவர்கள் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று இந்த உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் நாம் வேண்டி நிற்கின்றோம்.