வறுமைக்கு பயந்து ஓடியவன் இன்று வரலாறு படைத்து சாதனை! குவியும் வாழ்த்துக்கள்!

தெற்காசிய விளையாட்டுப் விழா (SAG) மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (04) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் மலையக வீரரான குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்தார்.

10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான சண்முகேஸ்வரன், சர்வதேச போட்டித் தொடரொன்றில் இலங்கை சார்பாக பெற்றுக் கொண்ட இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா நேபாளத்தில் உள்ள கத்மண்டு, பெக்கராவில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 7 நாடுகளைச் சேர்ந்த 3,000க்கும் அதிகமான வீர வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதில் மெய்வல்லுனர் போட்டிகள் கத்மண்டுவில் உள்ள தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் நேற்று (03) தொடங்கியதுடன், பெண்களுக்கான 1500 மீற்றரில் நிலானி ரத்நாயக்க முதல் தங்கத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்தார்.

அத்துடன், மெய்வல்லுனர் போட்டிகளிள் முதல் நாள் முடிவில் இலங்கை வீரர்கள் ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தது.

இந்த நிலையில், மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் போட்டித் தூரத்தை நிறைவுசெய்ய 30 நிமிடங்களும் 49.20 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய மட்டப் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த சண்முகேஸ்வரன், இன்றைய போட்டியில் தனது அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவு செய்தார்.

முன்னதாக, இவர் 30 நிமிடங்களும் 30.38 செக்கன்களில் ஓடியதே சிறந்த நேரப் பெறுமதியாகப் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், இந்திய வீரர் சுரேஷ் குமார் (29 நிமி. 33.61 செக்.), தங்கப் பதக்கத்தை வெற்றி கொள்ள, நேபாள வீரர் தீபக் அதிகாரி (30 நிமி. 50.06) வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.