100 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை: ஹீரோவாக காப்பாற்றிய 14 வயது சிறுவன்!

image_pdfimage_print

ஆழ்துளை

சீனாவில் 100 அடி ஆழ போர் வெல் கிணற்றுக்குள் குழந்தை ஒன்று தவறி விழ, ஹீராவாக சென்று காப்பற்றியிருக்கிறார் ஒரு 14 வயது சிறுவன்.

Zhao என்பவரும் அவரது மூன்று வயது குழந்தையும் நடை பயிற்சிக்காக செல்லும்போது, 100 அடி ஆழ போர் வெல் கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்கிறாள் அந்த குழந்தை. சிறிது நேரத்தில் மீட்புக் குழுவினர் வந்து சேர, தன்னை கயிற்றில் கட்டி குழிக்குள் இறக்குமாறு கதறியிருக்கிறார் அந்த தந்தை.

ஆனால் அந்த குழி மிகவும் குறுகலானது என்பதால் அதனை நிறைவேற்ற இயலவில்லை. அப்போது மீட்புக் குழுவினர்களில் ஒருவரான Wang Qingjun என்பவர் ஒரு ஆலோசனை கூறியிருக்கிறார்.

அதன்படி, தனது குடும்பத்தாரிடையே கலந்தாலோசித்த பின், தனது 14 வயது மகன் Wang Minranஐ கயிறு கட்டி குழிக்குள் இறக்கலாம் என ஆலோசனை கூறியிருக்கிறார்.

அதிகாரிகள் Minran சிறுவன் என்பதால் அந்த ஆலோசனையை ஏற்க மறுத்துள்ளார்கள். நேரம் கடந்து சென்று கொண்டிருக்க, Zhaoவின் மகளின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்திருக்கிறது.

முதலில் குழந்தைக்கு மூச்சுத் திணறாமல் இருக்க ஆக்சிஜன் குழாய் ஒன்றை குழிக்குள் அனுப்பிய மீட்புக்குழுவினர், அவசரமாக என்ன செய்யவேண்டும் என்பது குறித்து Minranக்கு கற்றுக்கொடுத்துள்ளனர்.

ஆறு முறை குழிக்குள் அனுப்பப்பட்ட Minranஆல் உள்ளே செல்ல இயலாததால் மீண்டும் மீண்டும் அவர் வெளியே எடுக்கப்பட்டு, குழியின் ஓரத்தில் இருந்த காங்கிரீட் சுரண்டப்பட்டபின், குழிக்குள் கயிறு கட்டி தலைகீழாக இறக்கப்பட்டுள்ளார் Minran.

நான்காவது முறை அந்த குழந்தையின் அருகில் Minran செல்லும்போது, ஒரு கை தலைக்கு மேலும், ஒரு கை உடலுக்கு கீழும் இருந்த நிலையில் குழிக்குள் சிக்கியிருந்த அந்த குழந்தை, அவரைப் பார்த்து அண்ணா என்னை விட்டு விட்டு போகாதீர்கள் என்றாளாம்.

அவளிடம், பயப்படாதே தைரியமாக இரு, நான் திரும்பவும் வருவேன் என்று கூறினாராம் Minran.

அதேபோல் ஆறாவது முறை உள்ளே தலைகீழாக அனுப்பப்பட்ட Minran, தான் கையுடன் கொண்டுபோயிருந்த ஒரு கயிற்றைக் குழந்தையின் கையில் கட்ட, அவரை மேலே இழுத்துவிட்டு, குழந்தையை மேலே தூக்கியிருக்கிறார்கள் மீட்புக்குழுவினர்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள் மருத்துவர்கள்.

தன்னலம் கருதாத அந்த சிறுவன், அவனை குழிக்குள் இறக்க துணிந்த அவனது பெற்றோர் போன்றோரால் ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.