முல்லைத்தீவில் கனமழை : 09 குளங்கள் வான் பாய்கின்றன!

நன்றி – Nitharsan Kandasamy

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குளங்களில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டுக் குளம், மதவாளசிங்கன் குளம், விசுவமடுக் குளம், கணுக்கேணி குளம், மருதமடுக் குளம், தட்டாமலைக் குளம் ஆகிய குளங்களின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறித்த 06 குளங்களும் வான் பாய்ந்து வருகின்றன.

முல்லைத்தீவு – முத்தையன் கட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களின் வாசிப்பு (05-12-2019) முத்தையன் கட்டுக் குளம் 17 அடி 09 அங்குலமாகவும், தண்ணிமுறிப்பு குளம் 18 அடி 01 அங்குலமாகவும், உடையார்கட்டுக் குளம் 23 அடி 10 அங்குலமாகவும், மதவாளசிங்கன் குளம் 16 அடி 11 அங்குலமாகவும், விசுவமடுக் குளம் 20 அடி 06அங்குலமாகவும், கணுக்கேணி குளம் 13 அடியாகவும், மருதமடுக் குளம் 14 அடி 03அங்குலமாகவும், தட்டாமலைக் குளம் 14 அடி 02அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.

அத்துடன், 24 அடி நீர்க்கொள்ளவு கொண்ட முத்தையன் கட்டு குளத்தில் தற்போது 17 அடி நீர்மட்டம் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு – வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 12 குளங்களில் 3 குளங்கள் வான் பாய்கின்றது.

வவுனிக்குளம் 15 அடி 10 அங்குலமாகவும், அம்பலப்பெருமாள் குளம் 08 அடி 04 அங்குலமாகவும், ஐயன்கன்குளம் 09 அடி 01 அங்குலமாகவும், கல்விளான்குளம் 08 அடி 11 அங்குலமாகவும், கொல்லவிளாங்குளம் 11 அடி 03 அங்குலமாகவும், கோட்டைகட்டியகுளம் 09 அடி 08 அங்குலமாகவும், மருதங்குளம் 04 அடி 10 அங்குலமாகவும், பழைய முறிகண்டிக்குளம் 08 அடி 01 அங்குலமாகவும், பனங்காமம் குளம் 07 அடியாகவும், தென்னியங்குளம் 07 அடி 03 அங்குலமாகவும், தேறாங்கண்டல் 11 அடி 05 அங்குலமாகவும் காணப்படுகின்றது.

நீர் நிலைகள் மற்றும் வான் பாயும் பகுதிகளில் நீராடுதல், சிறுவர்கள் விளையாடுதல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும், அவ்வாறான பகுதிகள் மற்றும் கழிவு நீர் வெளியேறும் ஆற்றுப்படு்கைகளை அண்மித்துள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

அத்துடன், மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களை தவிர்க்கும் வகையில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் முல்லைத்தீவு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

குளங்களின் நீர்மட்டம்!