வேட்டி, சேலையில் சென்று நோபல் பரிசு வாங்கிய தம்பதி!

இந்திய பொருளாதார நிபுணர் அபிஜித் விநாயக் பானர்ஜி, தன்னுடைய மனைவியுடன் இந்திய பாரம்பரிய உடையில் சென்று நோபல் பரிசு வாங்கியுள்ளார்.

இந்திய-அமெரிக்க பொருளாதார நிபுணர் அபிஜித் விநாயக் பானர்ஜி, அவரது பிரெஞ்சு-அமெரிக்க மனைவி எஸ்தர் டுஃப்லோ மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு ஸ்வீடனில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மற்ற அனைவரும் ஆடம்பர உடையில் வருகை தந்திருந்த போது, இந்த ஜோடி மட்டும் பாரம்பரிய இந்திய உடையில் வருகை தந்து பெருமைப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து The Nobel Prize தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோர் இன்று நோபல் பரிசு விருது வழங்கும் விழாவில் பதக்கங்களையும் சான்றிதழையும் பெறுகிறார்கள். வாழ்த்துக்கள்!

“உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான அவர்களின் சோதனை அணுகுமுறைக்காக” அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான பரிசு வழங்கப்பட்டது” என பதிவிட்டிருந்தது.

மூன்று பொருளாதார வல்லுனர்களுக்கும், பதக்கங்களும் ஒன்பது மில்லியன் ஸ்வீடிஷ் குரோனாவின் பரிசுத் தொகையும் (தோராயமாக ரூ .6.7 கோடி) வழங்கப்பட்டன.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் பானர்ஜி, 1998 ஆம் ஆண்டில் அமர்த்தியா சென் நோபல் பரிசு பெற்ற பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது நபராகும்.

அதேபோல நோபல் வென்ற இந்திய வம்சாவளி அல்லது குடியுரிமை பெற்ற 10 வது நபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.