தாய்க்கு ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொடுப்பதற்காக பெண்போல வேடமிட்ட மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடக்கு பிரேசிலின் போர்டோ வெல்ஹோ பகுதியை சேர்ந்த 60 வயதான மரியா என்கிற பெண், மூன்று முறை முயற்சித்தும் ஓட்டுநர் சோதனையில் தோல்வியடைந்துள்ளார்.

இதனால் அவர் சோகமானதை பார்த்த அவருடைய மகன் ஹீட்டர் ஷியாவே (43), நான்காவது முறை எப்படியும் தாய்க்கு ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக அவர் தன்னுடைய தாய் போல உடை, அலங்காரங்கள் செய்து ஓட்டுநர் சோதனையை மேற்கொண்டுள்ளார்.

ஏறக்குறைய அங்கிருந்த அதிகாரிகளை அவர் ஏமாற்றிவிட்டார் என்று கூட கூறலாம். இருப்பினும், கார் ஓட்டும் போது வழக்கத்திற்கு மாறாக அவருடைய கை நீளமாகவும், குரல் வலிமை வாய்ந்ததாகவும் இருந்ததை கவனித்த பெண் அதிகாரி, அடையாள அட்டையை மீண்டும் பரிசோதித்துள்ளார்.

அப்போது தான் ஹீட்டர் ஷியாவே, அவருடைய தாய் வேடத்தில் வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், பொலிஸார் அவரை கைது செய்தனர். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

