வீங்கிய முகத்துடன் மருத்துவரை நாடிய பெண்மணி: பரிசோதனையில் தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம் தாயார் ஒருவரது கன்னப்பகுதியில் இருந்து நாய்களின் உடம்பில் இருக்கும் ஒருவகை புழுவை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் சாலக்குடி பகுதியில் ஒரு மாதம் முன்னர் வீங்கிய முகத்துடன் இளம் தாயார் ஒருவர் மருத்துவர்களை நாடியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கன்னத்தில் இருந்து dog heartworm வகையை சேர்ந்த 1.6செ.மீ நீளம் கொண்ட புழுவை அப்புறப்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி தமிழகத்தின் சென்னையில் அமைந்துள்ள சிறப்பு மருத்துவமனை ஒன்றில், குறித்த புழு தொடர்பில் ஆய்வு மேற்கொண்டதில், அது நாய்களில் மட்டும் காணப்படும் புழு எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த புழுக்கள் நாய்களில் இருந்து கொசு மூலம் மனிதர்களில் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், நுண்ணிய கிருமியாக இருக்கும் இவை, பின்னர் புழுவாக மாறும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி அரைகுறையாக சமைத்த மாமிச உணவு சாப்பிட்டாலும், இதுபோன்ற கிருமிகள் உடம்பில் நுழைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் இளைஞர் ஒருவரின் கண்களில் இருந்து இதுபோன்ற புழு ஒன்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். கண்களில் மட்டுமின்றி, நுரையீரலிலும் இதுபோன்ற புழு இருக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.