கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பெருவிழா!

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு விழா இன்று காலை நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்து பதவி உயர்வு பெற்று இராஜாங்க அமைச்சின் செயலாளராக கடமையேற்றுள்ள சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவை மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துடன் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

பிள்ளையார் ஆலயம் முன்பாக இருந்து ஆரம்பமான பண்பாட்டு பேரணி பாரம்பரிய பண்பாட்டை எடுத்தியம்பும் வகையில் ஆரம்பமானது.

மயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பண்பாட்டு கலை அம்சங்களுடன், தமிழ் வளர்த்த பாரதி உள்ளிட்ட பெரியார்களின் காட்சிகளுடன் விழா மண்டபம் வரை வருகை தந்ததை தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

நிகழ்வுகள் கலாபூசணம் அப்பச்சி வள்ளிபுனம் அரங்கில் இடம்பெற்றன. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதுடன், மங்கள வாத்திய நிகழ்வுடன் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதன்போது பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கிளிநொச்சி பண்பாட்டலுவல்கள் பேரவையினால் வழங்கப்படும் அதி உயர் விருதான கலைக்கிளி விருதுகள் நால்வருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கலைத்துறையில் அதிக காலம் ஈடுபட்டமைக்காக வருடம் தோறும் குறித்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து இளம் கலைஞர்கள், கலைத்துறை சாதனையாளர்கள் உள்ளிட்டோருக்கான விருதுகளும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஓவிய கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்ட மக்கள் பண்பாட்டுக்கு அடிமையானவர்கள். பண்பாட்டை பேணி பாதுகாப்பதற்காக அதிகம் உழைப்பவர்கள் இருந்தும், இதுவரை பண்பாட்டினை ஊக்குவித்தது போன்று அடுத்து வரும் சந்ததியினருக்கும் அழைத்து செல்லும் வகையில் அதிகம் செயற்பட வேண்டும். நிகழ்வில் கலைத்துறையில் பண்பாட்டு நிகழ்வுகளை காணக்கிடைத்தது. இவற்றை சாதாரணமாக கலைகளாக பார்க்க முடியாது. இவை தமிழ் பண்பாட்டினையும் எடுத்து காண்பிக்கின்றது என கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.