தேசிய குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாணம் இரண்டாம் இடம் !

தேசிய மட்டத்திலான குத்துச் சண்டை போட்டியில் வடமாகாணம் இரண்டாம் இடத்தைத் தட்டிக்கொண்டுள்ளது.

குறித்த போட்டி கண்டி மாவட்டம், நாவலப்பிட்டியில் அமைந்துள்ள ஜயதிலக விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டரங்கில் இரு தினங்கள் நடைபெற்றிருந்தன.

குறித்த “சவாட் கிக் பொக்சிங்’ குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வட மாகாண வீர, வீராங்கனைகள் 18 தங்க பதக்கங்களையும், 11 வெள்ளி பதக்கங்களையும், 7 வெண்கலப் பதக்கங்களையும் வென்று வடமாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இலங்கை பிரான்ஸ் ‘சவேட்’ அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் தலைவரும், தேசிய மற்றும் சர்வதேச குத்துச் சண்டை பயிற்றுனருமாகிய சி.யூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் போட்டிகள் நடைபெற்றன.

தேசிய ரீதியில் நடைபெற்ற இவ் ‘கிக் பொக்சிங்’ குத்துச்சண்டை போட்டியில் நாடு பூராகவும் 300 இற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டு, பல்வேறு வயது பிரிவுகளிலும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

சிறந்த குத்துச்சண்டை வீரராக வவுனியா – கூமாங்குளத்தை சேர்ந்த எஸ்.சிறிதர்சனும், சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக வவுனியா சிதம்பரபுரத்தை சேர்ந்த கெ.கிசாழினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இக்குத்துச்சண்டை போட்டியில் சிறப்பாக விளையாடிய வவுனியாவை சேர்ந்த வீரர்களான, பதினாறு வயதுக்குட்பட்ட பிரிவில் பி.ராகுல், கே.நிறோஜன், பதினெட்டு வயது பிரிவில் எஸ்.சிறிதர்சன், வி.வசிகரன், எஸ்.சஞ்சயன், இருபத்தி ஐந்து வயது பிரிவில் ரி.நாகராஜா, பன்னிரெண்டு வயது பிரிவில் ஆர்.கே.கெவின் ஆகியோர் தேசிய விளையாட்டு அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன்

எதிர்வரும் 2020 ஜனவரி 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் பாக்கிஸ்தானில் நடைபெறவுள்ள கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார் தலைமையில், வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து சென்ற வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டு 36 பதக்கங்களை பெற்று தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டையில் வடக்கு மாகாணத்திற்கு இரண்டாம் இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

அகில இலங்கை ரீதியிலான சவாட் கிக் பொக்சிங் குத்துச் சண்டை போட்டிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.