அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்றைய தினம் வாகனமொன்று மரத்துடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் – அக்கரைப்பற்று பகுதியினை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் அட்டாளைச்சேனை சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னாலிருந்த மரத்துடன் மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வாகன சாரதி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஏறாவூர் மீச் நகர் பிரதேசத்தினை சேர்ந்த அஸீஸ் அஹமட் றூஹுல்லா (29 வயது), எஸ்.யூசூப் (37 வயது) ஆகியோர் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட சுமார் 500 கோழிகளும் இறந்துள்ளன. அதிக வேகம் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
