முல்லைத்தீவு மாவட்டத்தில் மழைவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் மாவட்ட அபிவிருத்திக்குழு சார்பில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் ச.கனகரத்தினம் நன்றி தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தியில் அனைவரும் ஒன்று திரண்டு முல்லைத்தீவை கட்டி எழுப்புவதற்கான செயற்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் என்னஅபிவிருத்திகளை செய்யவேண்டுமோ அந்த அபிவிருத்திகளை செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
முல்லைத்தீவின் அபிவிருத்தியினை கொண்டு செல்வதற்கு அரசாங்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயலாற்றுவேன் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.
எமது மாவட்டம் போரினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டம், அதன் பின்னர் மீண்டும் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். இம் மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகள் நீண்டகாலமாக தடங்கி கிடக்கின்றன. சில விடயங்கள் செய்யப்படாமல் இருக்கின்றன.
இவ்வாறு பலதரப்பட்ட வேலைகள் செய்யப்படவேண்டும், இதனை மனதில் கொண்டு எல்லோரும் நிறைவாக செயற்படவேண்டும். அதற்கான கடமைகளை நாங்கள் செய்வோம்.
கடந்த நாட்களில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்த அனைத்து தரப்பினருக்கும் மாவட்ட அபிவிருத்திக்குழு சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த மழை வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபருடன் பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் இணைந்து சேவைகளை செய்துள்ளனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இடங்களை பார்வையிட்டுள்ளேன், மக்களுக்கான சமைத்த உணவு உள்ளிட்ட உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக படையினர், பொலிஸார் முழுமையாக மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்கள். முக்கியமாக பரந்தன், புதுக்குடியிருப்பு வீதியில் பாலம் உடைப்பெடுத்தது அந்த பாலத்தினை படையினரின் முழுமையான பங்களிப்புடன் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் சீர் செய்து மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளனர்.
இதற்காக முழுமையான பங்களிப்பினை வழங்கிய அனைவருக்கும் மாவட்ட அபிவிருத்திக்குழு சார்பில் பாராட்டினை தெரிவித்துக் கொள்வதுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார திணைக்களத்தினர் மருத்துவ சுகாதார சேவைகளை வழங்கியமை சிறப்பாக அமைந்துள்ளது, அவர்களுக்கும் எங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன், என்று தெரிவித்துள்ளார்.
