முல்லைத்தீவில் தீவிரமடையும் மணல் கொள்ளை! மக்கள் அச்சத்தில்!

மணல் வாகன வழித்தட அனுமதி அண்மையில் நீக்கப்பட்டிருந்த நிலையில் அதாவது மணலை ஏற்றிக் கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் தேவையில்லை என்ற அறிவிப்பு அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளையர்களால் மணல் அகழ்வு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இரவு நேரங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் பல்வேறு பகுதிகளில் மணல் கொள்ளையர்களால் உழவு இயந்திரங்கள் மூலம் மணல் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அளம்பில் பகுதியில் உப்புமாவெளி பிரதேசம் அதனை அண்டிய கடற்கரையோரமாக உள்ள மணல் திட்டுகள் இரவோடு இரவாக கனரக இயந்திரங்கள் மூலம் அகழப்பட்டு கடத்தப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மணலைக் கொண்டு செல்வதற்கு வழித்தட அனுமதி தேவையில்லை என்ற நிலை ஏற்பட்ட பின்னரே இந்த மணல் அகழ்வு நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளையர்களுடைய நடவடிக்கையை பொலிஸார் அறிந்திருந்தும் மணல் கொள்ளையர்களிடம் இருந்து கையூட்டு பெற்றுக் கொண்டு இந்த நடவடிக்கையை கண்டும் காணாமல் இருப்பதாகவும் பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்தோடு ஜனாதிபதி தற்போது நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு முப்படையினருக்கும் அதிகாரம் வழங்கி இருக்கின்ற நிலையில் இராணுவத்தினரும், பொலிஸாரும், கடற்படையினரும் இந்த மணல் கொள்ளையர்கள் குறித்து எந்தவிதமான அக்கறையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை எனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த மணல் அகழ்வு தொடருமேயானால் குறித்த உப்புமாவெளி, உடுப்புக்குளம் கிராமங்களுக்கு அரணாக கடல் உட்புகாதவாறு காத்துக்கொண்டு காப்பாற்றி வைத்திருக்கும் இந்த மண் திட்டுகள் விரைவாக அழிந்துபோகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.