மனைவி விருப்பத்துக்காக வேண்டா வெறுப்பாக லொட்டரி சீட்டுகள் வாங்கிய கணவனுக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்!

லொட்டரி !

கேரளாவில் மனைவியின் விருப்பத்துக்காக வேண்டா வெறுப்பாக லொட்டரி டிக்கெட்கள் வாங்கிய ஏழை தொழிலாளிக்கு ஜாக்பாட் பரிசாக ரூ 70 லட்சம் கிடைத்துள்ளது. ஆலப்புழா அருகே உள்ள செட்டிகுளங்கரையை சேர்ந்தவர் சிவன்.

இவருக்கு ஓமனா என்ற மனைவி உள்ளார். சமீபத்தில் சிவன் தனது மனைவியுடன் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு நடந்து வந்தபோது அந்த பகுதியில் ஒருவர் லொட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார்.

அப்போது தான் ஒரு இதய நோயாளி என்றும் அதற்காக ஆபரே‌ஷன் செய்து உள்ளதாகவும் தனக்கு உதவுவதற்காக லொட்டரி சீட்டு வாங்கும்படி உருக்கமாக அவர்களை கேட்டுக்கொண்டார்.

ஆனாலும் சீட்டு வாங்க விருப்பமின்றி சிவன் அவரை கடந்து சென்றார். ஆனால் அவரது மனைவி ஓமனாவுக்கு லொட்டரி விற்பவர் மீது இரக்கம் ஏற்பட்டதால் கணவரிடம் லொட்டரி சீட்டு வாங்கும் படி கேட்டுக்கொண்டார். இதனால் மனைவியின் விருப்பத்திற்காக வேண்டா வெறுப்பாக லொட்டரி சீட்டை சிவன் வாங்கினார்.

அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது சிவன் வாங்கிய சீட்டுக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து சிவன் கூறுகையில், ஏழை கட்டிட தொழிலாளியான எனக்கு பணத்தை வீணாக செலவு செய்வதில் விருப்பம் கிடையாது.

விருப்பமில்லாமல் நான் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது நாங்கள் சிறிய வீட்டில் குடியிருந்து வருகிறோம். இந்த பரிசின் மூலம் வீட்டை பெரிதாக மாற்றி என் கடன்களை அடைப்பேன் என கூறியுள்ளார்.